நடிகர் சூர்யாவின் உதவியாளரிடம் மோசடி: பணிப்பெண் உள்பட நான்கு பேர் கைது
சென்னை: நடிகர் சூர்யாவின் உதவியாளரிடம் மோசடியில் ஈடுபட்டதாக பணிப்பெண் கைது செய்யப்பட்டார். குறைந்த விலையில் அதிகப்படியான தங்கம் கிடைக்கும் என கூறி பலபேரிடம் மோசடி செய்த ஒரு குடும்பத்தினரை மாம்பலம் போலீசார் கைது செய்தனர்.
குறிப்பாக நடிகர் சூர்யாவின் வீட்டில் பாதுகாப்பு காவலராக பணியாற்றி வந்த அந்தோணி ஜார்ஜ் என்ற காவலரிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கு தொடர்பாக சுலோச்சனா, மகன்கள் பாலாஜி, பாஸ்கர், அவரது சகோதரி விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரை மாம்பலம் போலீசார் கைது செய்தனர்.
குறிப்பாக இவர்கள் அனைவருமே நடிகர் சூர்யா வீட்டில் தான் வேலைபார்த்து வந்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் இந்த விதமான மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததால் முதற்கட்டமாக சூர்யா இவர்களை வேலையில் இருந்து பணிநீக்கம செய்து இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக 5500 ரூபாய் கட்டினாள் உடனடியாக மாதம் 1 கிராம் தங்ககாயின் கிடைக்கும் என கூறிதான் இந்த மோசடியை செய்துள்ளனர். முதலாவதாக இந்த கும்பல் நல்ல தங்கத்தை கொடுத்துவிட்டு அதன்பின்னர் 2 அல்லது 3 மாதம் கழித்து அதிகப்படியான தொகையை பெற்று அதன்பின்னர் போலியான தங்கத்தை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதில் ஏமாந்த நபர் கொடுத்த புகாரின் பெயரில் தான் மாம்பலம் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த குடும்பமானது பலபேரிடம் இது போன்று குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும் என கூறி மொத்தம் 2.5 கோடி அளவில் இது போன்ற மோசடியில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இவர்கள் மீது அண்ணாநகர், மாதவரம், உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையத்தில் மோசடி புகார்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியாக வேறு யாரேனும் தொடர்பு உள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணையை நிகழ்த்தி வருகின்றனர். கள்ளச்சந்தையில் குறைந்த விலையில் தங்கம் வாங்குவதாக கூறி இந்த மோசடியை அரங்கேற்றி வந்துள்ளனர் . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.