வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சேலம் கோட்டை அழகிரிநாதசுவாமி கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா: வரும் 30ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு
சேலம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் இன்று காலை முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. சேலம் கோட்டை பகுதியில் அழகிரிநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி வரும் 30ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு இன்று காலை கோயில் வளாகத்தில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு முன்னதாக காலை லட்சுமி நாராயண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது.
இவ்விழாவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேஸ்வரி சரவணன், செயல் அலுவலர் அனிதா, அறங்காவலர்கள், கோயில் அதிகாரிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 30ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழாவை யொட்டி கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஆங்காங்கே தடுப்புக்கட்டைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து நடக்கும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். கார்த்திகை தீபம் உற்சவம் இன்று இரவு 7 மணிக்கு தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.