முன்னாள் துணை ஜனாதிபதி தன்கர் அரசு பங்களாவை காலி செய்தார்: டெல்லி அருகே பண்ணை வீட்டில் குடியேறினார்
புதுடெல்லி: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகிய ஜெகதீப் தன்கர் ஒரு மாதத்திற்கும் மேலாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் ஜெகதீப் தன்கர் நேற்று தனது அரசு இல்லத்தை காலி செய்தார்.இதை தொடர்ந்து டெல்லி அருகே உள்ள சத்தர்பூரில் உள்ள பண்ணை வீட்டில் அவர் குடியேறினார். வட்டாரங்கள் கூறுகையில், இடைக்கால ஏற்பாடாக ஜெகதீப் தன்கர் தனியார் பண்ணை வீட்டில் குடியேறி உள்ளார். ஓய்வு பெற்ற துணை ஜனாதிபதியான தன்கருக்கு விரைவில் அதிகாரப்பூர்வ இல்லம் ஒதுக்கப்படும் என்றன. சத்தர்பூர் பண்ணை வீடு ஐஎன்எல்டி தலைவர் அபய்சிங் சவுதாலாவுக்கு சொந்தமானது. அபய்சிங்கின் தாத்தா தேவிலால் மூலம் அரசியலுக்கு வந்தவர் தன்கர்.
கடந்த 1989ம் ஆண்டு பொது தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சியில் பிடித்தன. ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனு தொகுதியில் தன்கர் வெற்றி பெற்றார்.இதில் வி.பி.சிங் பிரதமராகவும், தேவிலால் துணை பிரதமராகவும் பதவியேற்றனர்.அப்போது முதன்முறையாக எம்பியாக வெற்றி பெற்ற தன்கர் ஒன்றிய அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.