பாமக இளைஞரணி தலைவராக முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் நியமனம்: அன்புமணி அறிவிப்பு
சென்னை: விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி அன்று நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்க தலைவராக தனது பேரனான முகுந்தனை (ராமதாசின் மூத்த மகள் காந்திமதியின் மகன்) நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, மைக்கை மேஜையில் வீசிவிட்டு வெளியேறினார். அதன்பிறகு தான் தந்தை, மகனான ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. மூத்த நிர்வாகிகள், குடும்பத்தினர் சமரசம் பேசியும் இன்னும் இந்த பிரச்னை முடிவுக்கு வரவில்லை. இருவருக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் உருவானதால் கடந்த மே மாதத்தில் முகுந்தன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாமக இரண்டானது.
மகன் ஒரு குழுவாகவும், தந்தை ஒரு குழுவாகவும் செயல்பட்டு விமர்சித்து வருகின்றனர். இருவரும் மாற்றி மாற்றி நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக இளைஞர் அணி தலைவராக தமிழ்குமரனை (கவுரவ தலைவர் ஜி.கே.மணியின் மகன்) ராமதாஸ் கடந்த வாரம் நியமனம் செய்தார். இதற்கான ஆணையை தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ், நிர்வாகக்குழு உறுப்பினர் காந்திமதி ஆகியோர் தமிழ்குமரனிடம் வழங்கினர். தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் இளைஞரணி தலைவராக முன்னாள் செஞ்சி எம்எல்ஏ கணேஷ்குமார் நியமிக்கப்பட்டார்.