மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு வைரல் அதிமுகவை அழிக்க நினைத்தார் எம்ஜிஆர் எடப்பாடியை ஆதரிக்க நாங்க லூசுகளா? மைண்ட் வாய்சுன்னு நினைச்சு பேசிட்டாரோ...
திண்டுக்கல்: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சர்ச்சை பேச்சுக்கும், உளறல் பேச்சுக்கும் பெயர் போனவர். இந்நிலையில், திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: அதிமுகவை அழித்து விடலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என எம்ஜிஆர் நினைத்ததை போல, இந்த கட்சியை அசைத்து விடலாம் என நினைத்து கொண்டிருக்கின்றனர். கூட்டம் கூடுவதால் எல்லோரும் எம்ஜிஆர் போல ஆகிவிட முடியாது. நடிகர் விஜய்க்கு கூட்டம் கூடுகிறது. ஆனால், அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
மேடையில் இருக்கிற நாங்கள் எல்லாம் கிறுக்கன்களா? லூசுகளா எடப்பாடியை ஆதரிப்பதற்கு? (திடீரென சுதாரித்தவர்) பக்கத்து மாவட்டத்தில் உள்ள அவரை (ஓபிஎஸ்) ஏன் ஆதரிக்கவில்லை என்றால், அவரிடம் நேர்மை இல்லை; அவரிடம் பொறுப்புகளை கொடுத்து பார்த்தோம். சர்வாதிகாரத்தின் மொத்த உருவமாக அவர் இருந்த காரணத்தினாலே ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருக்கின்ற எடப்பாடியை நாங்கள் ஆதரிக்கிறோம். மனக்கசப்பில் அதிமுகவை விட்டு போனவர்கள் மீண்டும் வாருங்கள். இவ்வாறு பேசினார். இந்த பேச்சால் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சிறிதுநேரத்தில், ‘இதெல்லாம் அண்ணே வழக்கமாக பேசுறதுதானப்பா... இப்போ கூட மைண்ட் வாய்சுன்னு நினைச்சு பேசிட்டாரோ...’ என அலுத்து கொண்டு சென்றனர்.