ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் சேர்க்க சேலை வழங்கிய மாஜி அமைச்சர்
திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வலியுறுத்தி நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் திருமங்கலம் தீயணைப்பு நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஆர்பி.உதயகுமார் திடீரென பொதுமக்களுக்கு, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இலவச சேலைகள் வழங்கத் துவங்கினார். இதனால் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் திருமங்கலம் - விருதுநகர் மெயின்ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள், பொதுமக்களை அருகேயுள்ள ராஜபாளையம் மெயின்ரோட்டிற்கு அழைத்து சென்று சேலைகள் வழங்கத் துவங்கினர். அங்கும் மக்கள் திரண்டதால் ராஜபாளையம் புதிய நான்கு வழிச்சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தினை போலீசார் சீரமைத்தனர். இதற்கிடையே ஆர்.பி.உதயகுமார் மீண்டும் பழைய இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தார். இதையடுத்து உதயகுமார், மேலூர் தொகுதி எம்எல்ஏ பெரியபுள்ளான் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.