இலைக்கட்சி மாஜி அமைச்சர் அதிரடிக்கு தயாராகி வருவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘விரக்தியின் விளிம்புக்கு சென்றுவிட்ட இலை கட்சியின் மாஜி அமைச்சர் அதிரடிக்கு தயாராகி வருகிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் மாஜி அமைச்சர்களிடையே பனிப்போர் நீடித்த வண்ணம் இருக்காம்.. சமீபத்தில் சேலத்துக்காரர் சுற்றுப்பயணத்தின் போது, மாஜி அமைச்சர்களிடையே மோதல் வெளிச்சத்துக்கு வந்துருக்கு.. இந்த நிலையில், மாஜி அமைச்சர் மணியானவரின் கை ஓங்கியுள்ளதாம்.. இதனால் மற்றொரு மாஜி அமைச்சர் என்ன செய்வதென்று புரியாமல் தவித்து வருகிறாராம்.. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களிடம் பேச அவர் முடிவு செய்துள்ளாராம்.. தொடர்ந்து, புறக்கணிக்கப்படுவது அவருடைய ஆதரவாளர்களிடையே சலசலப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்குதாம்.. இதனால் வெகுவிரைவில், அதிரடிக்கு மாஜி அமைச்சர் தயாராகி வருகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘என்னைப்பற்றி யாரிடம் புகார் செஞ்சாலும் மீண்டும் என்னிடம் தான் வர வேண்டும் என மிரட்டுகிறாராமே விஏஓ..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் மாவட்டத்துல இருக்கிற மேட்டுப்பாளையம் ஊராட்சியில், தமிழ் கடவுள் பெயர் கொண்ட விஏஓ அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிட்ேட இருக்காம்.. இவருக்கு கூடுதல் பொறுப்பும் கொடுத்திருக்கிறதால இரண்டு ஊராட்சிகளிலும் இருந்து பட்டா மாறுதல், சிட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய் துறை சம்பந்தமான சான்றிதழ் கேட்க செல்லும் பொதுமக்களிடம் குறைந்தது ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வெளிப்படையாகவே லஞ்சம் கேட்டு டார்ச்சர் கொடுக்கிறாராம்.. இந்த டார்ச்சரை தாங்க முடியாம பொதுமக்கள் சப்-கலெக்டர் ஆபீசில் புகார் கொடுத்தாங்களாம்.. இதுதொடர்பாக விசாரிச்ச சப்-கலெக்டர் அட்ராசிட்டி விஏஓவை அழைத்து எச்சரிக்கை விடுத்தாராம்.. ஆனாலும், விஏஓ திருந்தியபாடு இல்லையாம்.. என்னைப்பற்றி யாரிடம் புகார் செய்தாலும் மீண்டும் என்னிடம்தான் வர வேண்டும் என பொதுமக்களை மிரட்டி வருகிறாராம்.. இப்போ விஏஓ நடவடிக்கையை விஜிலென்ஸ் தீவிரமா கண்காணிச்சிட்டு இருக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நட்டாற்றில் விட்டு விட்டு போயிட்டதாக மாவட்ட செயலாளர்கள் எல்லாம் கடும் விரக்தியில இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அதிமுகவை மீட்காமல் தற்போது ஓபிஎஸ் நட்டாற்றில் நிற்பதால் மன்னர் மாவட்டத்தில் ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கடும் விரக்தியில் இருக்காங்களாம்.. வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் நகராட்சி தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.. இதேபோல் தெற்கு மாவட்டத்தில் டிடிவியின் முன்னாள் ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டு இருக்காரு.. இவர்களுடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் செல்லவில்லையாம்.. இருந்தாலும் கடந்த சில மாதங்களாக கட்சியை நடத்தி வந்திருக்காங்க.. எப்படியாவது அதிமுகவில் சேர்ந்து கட்சியில் தங்களுக்கு தகுந்த அக்கீகாரத்தை பெற்று தருவார்கள் என்று நினைத்தாங்களாம்.. அதற்கான வேலைகளையும் செய்து இருக்காங்க.. ஆனால் மலராத கட்சியை நம்பி தற்போது நட்டாற்றில் இருக்கிறார். ஓபிஎஸ் ஒன்றும் செய்வதில்லை. அவரை நம்பி வந்ததற்கு நட்டாற்றில் விட்டு விட்டனரே என புலம்பி தவிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போஸ்டருக்கு மேல் போஸ்டர் ஒட்டியும் இன்னும் போஸ்டிங் வரலையே என வருத்தத்தில் இருக்கிறாராமே இலைக்கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்துல உள்ள இலைக்கட்சியின் முன்னாள் மா.செ. ஒருத்தரு, போஸ்டருக்கு மேல் போஸ்டர் ஒட்டியும் இன்னும் போஸ்டிங் வரலையே என்று வருத்தத்தில் உள்ளாராம்.. இவரு ஏற்கனவே தேனிக்காரர் அணியில் இருந்து பின்னர் சேலத்துக்காரர் அணிக்கு வந்தவரு.. மாதம் ஒருமுறை என கணக்கு வைத்து, போஸ்டர் அச்சடித்து ஒட்டி வருகிறாராம்.. போஸ்டர் தான் பிரமாண்டமாக இருக்குதே தவிர, இன்னும் இவருக்கு கட்சியில் போஸ்டிங் பற்றி எந்த பேச்சும் இல்லையாம்.. போஸ்டிங் வருவதற்கான அறிகுறியே இல்லாததால் அப்செட் மூடில் இருக்கிறாராம்.. கட்சி நிகழ்ச்சிகளுக்கும் முறையான அழைப்புகள் கிடையாதாம்.. முன்னாள் மா.செ. என்ற வகையிலாவது அழைக்கலாம். ஆனால் அதைக் கூட கட்சிக்காரங்க செய்ய மாட்டேங்கிறாங்க என்று தன்னை சந்திப்பவர்களிடம் ஆதங்கமாக பேசி வருகிறாராம்.. கட்சி பணி இல்லாததால் அவ்வப்போது விவசாய பணி, புல்லட் ஓட்டுவது போன்ற போட்டோக்களை சமூக வலை தளங்களில் போட்டு லைக் வாங்குவதில், ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.