“மீலாதுன் நபி” திருநாளையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து!
சென்னை: அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த திருநாளாம் “மீலாதுன் நபி” திருநாள் உலகம் எங்கும் கொண்டாடப்படும் இந்த இனிய வேளையில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் தெரிவித்ததாவது; அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த திருநாளாம் "மீலாதுன் நபி” திருநாள் உலகம் எங்கும் கொண்டாடப்படும் இந்த இனிய வேளையில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நேர்வழி பெறுவதற்காக இறைவனால் அளிக்கப்பட்ட மாபெரும் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்கள். "குத்துச் சண்டையில் அடுத்தவரை வீழ்த்துபவர் வீரர் அல்ல; மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவரே வீரர்” என்கிறார் நபிகள் நாயகம் அவர்கள். கோபம்தான் நாகரிகமற்ற வார்த்தைகளை பிரயோகிக்க தூண்டுகிறது. இந்தக் கோபம்தான் பகைமையையும், வெறுப்பையும் உருவாக்குகிறது. “பூமியில் உள்ளவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள். வானத்தில் உள்ளவர் உங்கள்மீது கருணை காட்டுவார்” என்றும் போதிக்கிறார் நபிகள் நாயகம் அவர்கள்.
கோபத்தை அடக்கி கருணை காட்டுவதன்மூலம் இறைவனின் கருணை அனைவருக்கும் கிடைக்கும் என்பதோடு, அமைதியும், ஆனந்தமும் பெருகும். நபிகள் நாயகம் பிறந்த இந்த நன்னாளில் கோபத்தை அடக்கி எல்லோரிடமும் கருணை காட்ட நாம் அனைவரும் உறுதி ஏற்போம். இந்த இனிய நாளில், இறைத் தூதரின் பொன்மொழிகளைப் பின்பற்றி எல்லாம்வல்ல இறைவனின் திருவருளை அனைவரும் பெற்றிட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.