முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாரிசா? ஜெகன்மோகன் ரெட்டிக்கு போட்டியாக மகனை களத்தில் இறக்கிய ஒய்.எஸ்.ஷர்மிளா: ஆந்திர அரசியலில் பரபரப்பு
திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி. இவரது மறைவுக்கு பிறகு, அவரது மகன் முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி அரசியலில் தனக்கென இடத்தை பிடித்து அங்கம் வகித்தார். மேலும், ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாரிசாகவும் உள்ளார். இருப்பினும், ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அவரது சகோதரி ஒய்.எஸ்.சர்மிளாவுக்கும் இடையே அரசியல் ரீதியாக எந்த இணக்கமும் இல்லை. இந்த சூழலில் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள ஒய்.எஸ்.சர்மிளா நேற்று தனது மகன் ராஜா ரெட்டியை தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி குடும்பத்தின் அரசியல் வாரிசாக அறிமுகப்படுத்த முதல் படியை எடுத்தார். இதற்காக தன்னுடைய மகனை கர்னூலுக்கு அழைத்துச் சென்று பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், ஒய்.எஸ்.ராஜா ரெட்டி, உயர் கல்வி முடித்த பின்னர் அரசியல் ரீதியாக எந்த தொடர்பும் இல்லாமல் அமைதியாக இருந்து வந்த நிலையில், அவரை அரசியலுக்குக் கொண்டுவர ஷர்மிளா முடிவு செய்துள்ளார். இதனால் நேற்று திடீரென, தனது தாயார் விஜயம்மாவின் ஆசிர்வாதத்துடன் வீட்டில் இருந்து புறப்பட்டு கர்னூலில் உள்ள வெங்காய சந்தைக்கு வந்து மகனுடன் விவசாயிகளைச் சந்தித்தார். தனது மகன் ராஜா ரெட்டியை அருகில் நிற்க வைத்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இறுதியில் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த ஷர்மிளா தனது மகன் ஒய்.எஸ்.ராஜா ரெட்டி தேவைப்படும்போது ஆந்திர மாநில அரசியலுக்கு வருவார் என கூறினார். இதற்கிடையில் ஒய்.எஸ்.ஜெகன் மோகனுடன் உள்ள மோதல் காரணமாக, மகன் ஒய்.எஸ். ராஜா ரெட்டியை, தனது தாய் மாமா ஜெகன் மோகனுக்கு எதிராக அரசியலுக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராக மாற்றுவாரா? அல்லது சொந்த கட்சியை தொடங்கி செயல்படுவாரா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.