நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி தேர்வு!
காத்மாண்டு: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். GenZ பிரதிநிதிகள், ராணுவத் தலைவர் மற்றும் குடியரசு தலைவருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய 7 நாட்கள் காலக்கெடு வழங்கியது நேபாள அரசு. அந்த கெடு முடிந்த நிலையில் 4ம் தேதி அன்று பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைதளங்கள் அங்கு தடை செய்யப்பட்டது. இந்த நிறுவனங்கள் பதிவு செய்யும் வரையில் தடை நடவடிக்கை தொடரும் என அந்த நாட்டு அரசு தெரிவித்தது.
தற்போது எக்ஸ், பேஸ்புக், யூடியூப் என 26 சமூக வலைதளங்கள் நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. நேபாள அரசின் சமூக வலைதள பேச்சுரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டின் பல இடங்களில் போராட்டம் வெடித்தது. பிரபல நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் நேபாள பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களால் நாடாளுமன்றம் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. போராட்டத்தில் இதுவரை 51 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நேபாளத்தில் ஜென் ஸீ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்த நிலையில், நேபாளத்தில் தொடர் போராட்டங்களின் காரணமாக சமூக ஊடங்களின் மீதான தடையை நேபாள அரசு நீக்கியது. இணையதள தடைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்ததால், இடைக்கால பிரதமராக நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு போராட்டக்குழு ஆதரவு தெரிவித்துள்ளது. நேபாளத்தின் முதல் மற்றும் ஒரே பெண் தலைமை நீதிபதியான 73 வயதான கார்கி, நேர்மை மற்றும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்றவர்.