வாக்கு திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கருத்து
புதுடெல்லி: ‘வாக்கு திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து ஆட்சேபனைக்குரிய மற்றும் புண்படுத்தும் வகையில் பேசுவதற்கு பதிலாக அது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்’ என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறி உள்ளார். கடந்த 2010 ஜூலை 30 முதல் 2012, ஜூன் 10 வரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த குரேஷி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையம் தாக்குதலுக்கு உள்ளாகும்போது அல்லது எந்த வகையிலும் பலவீனமடைவதைக் காணும்போது, நான் கவலைப்படுகிறேன். தேர்தல் ஆணையம் மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை அவர்களுக்கு தேவை. அதனால்தான் நான் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த போது எப்போதும் எதிர்க்கட்சிகளுக்கு முன்னுரிமை அளித்தேன். ஏனெனில் எதிர்க்கட்சிகள் அதிகாரத்தில் இல்லை என்பதால்தான்.
வாக்கு திருட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி புகார் அளித்த போது, அவரிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சத்தம் போட்டது ஆட்சேபனைக்குரியது, புண்படுத்தக் கூடியது. புகார் கூறுபவர் எதிர்க்கட்சித் தலைவர்; அவர் தெருவில் இருப்பவர் அல்ல. லட்சக்கணக்கான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், லட்சக்கணக்கான மக்களின் கருத்தை அவர் வெளிப்படுத்துகிறார். அதற்கு பதிலாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். அதுதான் முழு தேசத்திற்கும் திருப்தி அளிக்கக் கூடியது. முழு தேசமும் இதை பார்த்துக் கொண்டிருக்கிறது.
யார் புகார் அளித்தாலும் விசாரிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. ஆனால், நாம் அறிந்த தேர்தல் ஆணையம் போல் இது இல்லை என்று நான் நினைக்கிறேன். இதுவே எதிர்க்கட்சி தேர்தல் ஆணையத்திடம், ‘‘நீங்கள் தயாரிக்கும் புதிய வாக்காளர் பட்டியல் தவறு இல்லாதது என்று பிரமாணப் பத்திரம் கொடுங்கள். ஒரு தவறு இருந்தால், நீங்கள் குற்றவியல் பொறுப்பேற்கப்படுவீர்கள்’ என்று கூறினால் என்னவாகும்? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.