முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா: பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததற்கு கடும் எதிர்ப்பு
அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா ஆரம்பம் முதலே பாஜவுடனான கூட்டணியை எதிர்த்து வருகிறார். இந்நிலையில் அதிமுக- பாஜ கூட்டணி வைத்ததால் கடும் அதிருப்தியில் இருந்து வந்த அன்வர் ராஜா நேற்று காலை திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் திமுகவில் இணைந்ததால் சிறுபான்மை வாக்கு வங்கி வலுப்படும் எனவும், அது அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்த அன்வர்ராஜா அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டி: அதிமுக, தனது கொள்கையில் இருந்து தடம் புரண்டு இப்போது பாஜவின் கையில் சிக்கி இருக்கிறது. கூட்டணி எல்லாம் கிடையாது.
அமித்ஷா தெளிவாக சொல்லியுள்ளார். என்டிஏ கூட்டணி ஆட்சிதான் என்று கூறிவிட்டார். ஒரு இடத்தில் கூட எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறவில்லை. நான் தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று எடப்பாடியால் உறுதிப்படுத்த முடியவில்லை. எந்த கட்சியில் பாஜ சேர்ந்தாலும் அக்கட்சியை அழிப்பதுதான் பாஜவின் நோக்கம். அதேபோன்று அதிமுகவை அழித்துவிட வேண்டும் என்பதுதான் பாஜவின் திட்டம். பாஜ ஒரு நெகட்டிவ் அணி. அதை கண்டிப்பாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவேதான் நான் எடப்பாடியிடம் எவ்வளவோ சொல்லி பார்த்தேன். கட்சியை காப்பாற்ற வேண்டுமே என்று என் மனதில் உள்ளதையெல்லாம் சொல்லி பார்த்தேன். அதையெல்லாம் அவர்கள் கேட்பதற்கு வழியில்லை. அதனால்தான் அங்கிருந்து நான் வெளியேறி உள்ளேன். அடுத்த ஒரே திட்டம் திமுகதான். எனவேதான் தளபதி தலைமையிலான திமுகவில் இன்று இணைந்துள்ளேன். நிச்சயமாக தளபதி மீண்டும் முதல்வராக வருவார், அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை எப்படி சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டு மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்றால், ஒரு தலைவர் மீது நம்பிக்கை வைத்துதான் அக்கட்சிக்கு வாக்கு அளிக்கிறார்கள்.
திராவிட இயக்க கொள்கையை காப்பாற்ற, மாநில சுயாட்சி, மொழியை, இனத்தை காப்பாற்றுகின்ற தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். மொழிக்கு, சமுதாயத்துக்கு ஆபத்து வரும்போது மத்திய அரசுடன் போராடி பாதுகாப்பது மட்டுமல்ல, மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் நீதிமன்றத்துக்கே சென்று தீர்ப்புகளை வாங்கி இந்தியாவுக்கே உதாரணமாக இருக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின். அனைத்து முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி, பாஜவின் எதிர்ப்பை கூர்மைப்படுத்தியவரும் தலைவர் மு.க.ஸ்டாலின்தான். அவர் இந்தியாவுக்கே உதாரணமாக திகழ்கிறார். இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சர் மீண்டும் வர வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள், கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை தருவார்கள். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர் இனி வருவார்களா என்பதும் சந்தேகம்தான். என்னை அன்போடு வரவேற்று, கழகத்தில் சேர்த்துக் கொண்ட தளபதிக்கு நன்றி.
அதிமுகவில் உள்ள பல தலைவர்கள் தற்போது மன வருத்தத்தில்தான் உள்ளனர். பாஜவுடன் கூட்டணி என்கிறார்களே தவிர, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி என்று அமித்ஷா இதுவரை சொல்லவில்லை. இந்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பது பாஜவின் நோக்கமில்லை. அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதற்காத்தான் கூட்டணி வைத்துள்ளார்கள். எடப்பாடி, என்னுடைய பேச்சை மட்டுமல்ல அதிமுக முன்னணி தலைவர்கள் யாருடைய பேச்சையும் அவர் கேட்க மாட்டார். தமிழக மக்கள் அதிமுக - பாஜ கூட்டணியை விரும்பவில்லை. தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.