மாஜி அதிபர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் ரத்து: இலங்கையில் சட்டம் நிறைவேற்றம்
கொழும்பு: இலங்கையில் மாஜி அதிபர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் முன்னாள் அதிபர்களுக்கான சிறப்பு சலுகைகளை திரும்ப பெறும் மசோதாவை நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும். மசோதாவின் எந்தவொரு விதியும் அரசியலமைப்பின் விதிகளுடன் முரண்படவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில் அதிபர்களுக்கான சிறப்பு சலுகைகளை திரும்ப பெறும் மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடந்தன. அதன் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 151 பேர் வாக்களித்தனர். ஒருவர் எதிராக வாக்களித்தார். இது குறித்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஹர்ஷனா நாணயக்காரா,‘‘ இந்த சட்டத்தின் மூலம் மாஜி அதிபர்கள் தங்களுடைய ஓய்வூதியத்தை இழக்க மாட்டார்கள்.
ஆனால் அரசு பங்களா,அரசு போக்குவரத்து, பணியாளர்கள் போன்ற சிறப்பு உரிமைகள் வழங்கப்படமாட்டாது என்றார். இலங்கையில் முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி(என்பிபி) தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.