முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்பட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்
சென்னை: செங்கோட்டையன் ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி. உள்பட 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்பட்ட செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக நவம்பர் 31ம் தேதி எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ; கட்சியின் கொள்கை, நோக்கம் மற்றும் ஒழுங்கு விதிமுறைகளைப் புறந்தள்ளி செயல்பட்டு வந்த அதிமுகவில் முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்பட 12 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அதிமுக முன்னாள் எம்,பி. சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மௌதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளற் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 12 பேரும் அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் கட்சியினா் யாரும் தொடா்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இன்று மதியம் 12 மணியளவில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.