நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் விடுதலை: குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரங்களை சிபிஐ தாக்கல் செய்யவில்லை
புதுடெல்லி: சட்டீஸ்கரில் உள்ள பதேபூர் கிழக்கு நிலக்கரி சுரங்க தொகுதியை ஆர்கேஎம் பவர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்ததாக கடந்த 2014ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக முன்னாள் ஒன்றிய நிலக்கரி துறை செயலாளர் எச்.சி.குப்தா, இணை செயலாளர் குல்ஜீத் சிங் குரோபா, பவர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆண்டாள் ஆறுமுகம்,சிங்காரவேல் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சிபிஐ தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்த சிபிஐ முதல் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் ஊழல் தடுப்பு சட்டம், 1988ன் விதிகளின்படி நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தது. இதில் திருப்தி அடையாத டெல்லி சிறப்பு நீதிமன்றம், மேலும் விசாரணை நடத்தும் படி சிபிஐக்கு உத்தரவிட்டது.
அதன் பிறகு மீண்டும் விசாரணையை நடத்திய சிபிஐ 6 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், ஆர்கேஎம் பவர்ஜென் நிறுவன இயக்குனர்கள்,நிலக்கரி சுரங்கத்தை பெறுவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்து அரசாங்கத்தை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியது. இந்த வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீரஜ் மோர் விசாரித்து வந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிபிஐ குற்ற பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் குப்தா, குரோபா மற்றும் ஆர்கேஎம் பவர்ஜென் இயக்குனர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிரான எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் கூறி அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.