காங்கிரசில் இணைந்தார் மாஜி ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன்
புதுடெல்லி: ஜம்மு காஷ்மிரில் மக்களுக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 2019ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தவர் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன். கேரளாவை சேர்ந்த இவர் வடகிழக்கு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பணியாற்றியவர். இந்நிலையில் கண்ணன் நேற்று காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா மற்றும் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கண்ணன் கோபிநாதன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வேணுகோபால் கூறுகையில், ” கண்ணன் கோபிநாதன் 2019ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமா இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நீதிக்காகவும், ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் போராடும் அதிகாரிகள் அரசினால் தண்டிக்கப்படுகிறார்கள்” என்றார்.