ஆன்லைன் டிரேடிங் மூலம் பைனான்சியரிடம் ரூ.1.43 கோடி பறித்த முன்னாள் வங்கி மேலாளர் கூட்டாளியுடன் கைது: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
சென்னை: ஆன்லைன் டிரேடிங் மூலம் பைனான்சியரிடம் ரூ.1.43 கோடி பறித்த முன்னாள் வங்கி மேலாளர் மற்றும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஆகிய 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(36). இவர் பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சமூக வலைத்தளத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வர்த்தக விளம்பரத்தை பார்த்து, அதை தொடர்பு கொண்டு வாட்ஸ் அப் குழு ஒன்றில் இணைந்துள்ளார். அந்த குழுவில் மோசடி நபர்கள் அனுப்பிய லிங் மூலமாக முதலீட்டு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து, அதில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்று சந்தேக நபர்கள் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி பல்வேறு வங்கி கணக்குக்கு ரூ.1,43,06,211 பணம் செலுத்தியுள்ளார்.
முதலில் அவர் செலுத்திய பணத்திற்கு லாபம் வருவது போல் எதிர்தரப்பில் பணம் பைனான்சியர் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை பைனான்சியர் எடுக்க முயன்ற போது, பல்ேவறு காரணங்களை கூறி பணம் எடுக்க முடியாத அளவில் வங்கி கணக்கை முடக்கி பணம் மோசடி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பைனான்சியர் கார்த்திக் கடந்த மாதம் 16ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார், பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிகணக்கு விபரங்களை வைத்து விசாரணை நடத்திய போது, சூர்யா ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளர் சூர்யா சீனிவாஸ்(50) என்பவர், பைனான்சியர் கார்த்திக்கை ஏமாற்றியது தெரியவந்தது.
அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சூர்யா சீனிவாசை கைது செய்து விசாரணை நடத்திய போது, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் வங்கியின் முன்னாள் மேலாளர் சேஷாத்ரி எத்திராஜ்(43) என்பவர் மூலம் மோசடி செய்த பணத்தை பல்வேறு வங்கிக்கு மாற்றி பறித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், சைதாப்பேட்டையை சேர்ந்த தனியார் வங்கியின் முன்னாள் மேலாளர் சேஷாத்ரி எத்திராஜை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மோசடிக்கு பயன்படுத்திய 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் வங்கி மேலாளர் மற்றும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் சூர்யா சீனிவாஸ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.