வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் பரபரப்பு தீர்ப்பு
டாக்கா: வங்கதேச மாணவர் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் வரை மாணவர் போராட்டம் நடந்தது. இந்த போராட்டங்களை அரசு தீவிரமாக ஒடுக்கியது. இதன் காரணமாக சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஆக.5ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டத்தின் மீது கொடிய ஒடுக்குமுறைக்கு உத்தரவிட்டதாக ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அங்குள்ள சர்வதேச குற்றவியல் தீர்பாய நீதிமன்றத்தில் பல மாதங்களாக விசாரணை நடந்தது.
இந்நிலையில், நீதிபதி கோலம் மோர்டுசா மொசும்தார் தலைமையிலான நடந்த விசாரணை இறுதியில் நேற்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அறிவித்தது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களின் மரணத்துக்கு வழிவகுத்த கொடிய அடக்குமுறைக்கு உத்தரவிட்ட குற்றச்சாட்டில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர், அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவரது அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் பறிமுதல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் காவல் துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுனுக்கு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார். இதில் வன்முறையை தூண்டுதல், கொலை செய்ய உத்தரவு மற்றும் அட்டூழியங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஆகியவை அடங்கும் என்று டாக்காவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோலம் மோர்டுசா மொசும்தர் தெரிவித்தார். இருப்பினும் ஷேக் ஹசீனாவுக்கு ஒரே ஒரு தண்டனையை மட்டுமே விதிக்க முடிவு செய்துள்ளோம், அதாவது மரண தண்டனை என்று கூறினார். வங்கதேசத்தில் பிப்ரவரி தொடக்கத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* ஷேக்ஹசீனா, கமலை ஒப்படைக்க வேண்டும்; இந்தியாவுக்கு வங்கதேசம் வலியுறுத்தல்
வங்கதேச கலவரம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக்ஹசீனா, உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமல் ஆகியோரை உடனடியாக நாடு கடத்துமாறு வங்காளதேச இடைக்கால அரசாங்கம் நேற்று இந்தியாவை வலியுறுத்தியது. இதுதொடர்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் கூறுகையில்,’ இந்த இரண்டு குற்றவாளிகளையும் உடனடியாக வங்காளதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். வங்காளதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே தற்போதுள்ள இருதரப்பு நாடுகடத்தல் ஒப்பந்தம், இரண்டு குற்றவாளிகளையும் இந்தியா கட்டாயப் பொறுப்பாக மாற்றுவதைக் குறிக்கிறது.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட நபர்களுக்கு தங்குமிடம் வழங்குவது நட்பற்ற செயலாகவும் நீதியை புறக்கணிப்பதாகவும் கருதப்படும். எனவே இரு நாடுகளுக்கும் இடையிலான நாடுகடத்தல் ஒப்பந்தத்தின்படி, இருவரையும் ஒப்படைப்பது இந்தியாவிற்கு கட்டாயக் கடமை. தனியாக, சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், ஹசீனாவை நாடுகடத்த இடைக்கால அரசாங்கம் மீண்டும் இந்தியாவுக்கு ஒரு கடிதம் எழுதுவார். இந்த படுகொலையாளருக்கு இந்தியா தொடர்ந்து அடைக்கலம் கொடுத்தால், அது ஒரு விரோதச் செயல் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
* பாரபட்சமான தீர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஷேக் ஹசீனா பரபரப்பு அறிக்கை
ஷேக் ஹசீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு மோசடி தீர்ப்பாயம் எனக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. அவர்கள் பாரபட்சத்துடனும் அரசியல் உள்நோக்கத்துடனும் உள்ளனர். மரண தண்டனை விதித்திருப்பதன் மூலம், வங்கதேச மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரை நீக்கவும், அவாமி லீக் கட்சியை ஒழிக்கவும் இடைக்கால அரசில் இருக்கும் தீவிரவாத நபர்கள் முயன்று உள்ளார்கள். டாக்டர் முகமது யூனுசின் குழப்பமான, வன்முறை நிறைந்த, பிற்போக்குத்தனமான நிர்வாகத்தால், லட்சக்கணக்கான வங்கதேச மக்களை முட்டாளாக்க முடியாது, அவர்களின் ஜனநாயக உரிமையை பறிக்க முடியாது. அவாமி லீக்கை அழித்தொழிப்பதும், முகமது யூனுஸ் மற்றும் அவரது அமைச்சர்களின் தோல்விகளில் இருந்து உலகின் கவனத்தை திசை திருப்புவதுமே இந்த தீர்ப்பின் நோக்கம். சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். கடந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நிகழ்ந்த அரசியல் பிளவால் இரு தரப்பிலும் நிகழ்ந்த மரணங்களுக்கு நான் இரங்கல் தெரிவிக்கிறேன். ஆனால், நானோ பிற அரசியல் தலைவர்களோ போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிடவில்லை என்றார்.
* ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீட்டை இடிக்க முயற்சி போராட்டம், தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும், வங்கதேசத்தை நிறுவனருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீட்டை இடிக்க முயன்ற போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் நேற்று தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் பல போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர்.
* வங்கதேச மக்களின் நலன்களுக்கு இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்படும் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,’ வங்கதேச மக்களின் நலன்களை காக்க இந்தியா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக வெளியான தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. நெருங்கிய அண்டை நாடாக, வங்கதேச மக்களின் நலன்களுக்கு, அந்த நாட்டில் அமைதி, ஜனநாயகம், உள்ளடக்கம் மற்றும் ஸ்திரத்தன்மை உட்பட, இந்தியா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. அதற்காக நாங்கள் எப்போதும் அனைத்து தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம்’ என்று கூறியுள்ளது.