அதிமுக மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் வீடுகளில் ரெய்டு: கரூர், நாமக்கல், திண்டுக்கல்லில் அதிரடி
நாமக்கல்லில் உள்ள திருச்சி ரோடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(55). தொழிலதிபரான இவர், நாமக்கல்-சேலம் ரோட்டில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இதையடுத்து நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் இவரது அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் சென்று ஆவணங்கள், வங்கி கணக்குகள் மற்றும் கம்ப்யூட்டர் பதிவுகளை சோதனை செய்தனர். பின்னர் மோகனூர் ரோட்டில் உள்ள கலைவாணி நகரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தி, சில ஆவணங்களை போலீசார் எடுத்துச் சென்றனர்.
திண்டுக்கல் நேருஜி நகர் முனிசிபல் காலனியில் உள்ள தனியார் நிறுவனத்திலும் நேற்று சிபிசிஐடி போலீசார் சென்று, ரூ.50 லட்சம் பண பரிவர்த்தனை தொடர்பாக சோதனையில் ஈடுபட்டனர். இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், தாடிக்கொம்புவில் உள்ள குடோனிலும் சோதனை நடத்தினர். இதேபோன்று குஜிலியம்பாறை ஒன்றியம், லந்தக்கோட்டை மாணிக்கபுரத்தில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினருக்கு சொந்தமான நூற்பாலையிலும் சிபிசிஐடி போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.