முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்தபோது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணை வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது? அரசு நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் காவல் துறையினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.