பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசி சிறையில் அடைப்பு
பாரிஸ்: நிகோலஸ் சர்க்கோசி(70) கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வந்தார். இவர் மேற்கத்திய நாடுகளுடன் லிபியா நாட்டுக்கு நல்லுறவு ஏற்படுத்தி தருவதாக கூறி, லிபியா முன்னாள் அதிபர் மொய்மர் கடாபியிடமிருந்து சட்டவிரோதமாக நிதி உதவி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அந்த நிதியை 2007ம் ஆண்டு பிரான்சில் நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தில் முறைகேடாக பயன்படுத்தியதாகவும் நிகோலஸ் சர்கோசி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளை நிகோலஸ் மறுத்து வந்தார்.
இதுதொடர்பாக பாரிஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் பாரிஸ் நீதிமன்றம், நிகோலஸ் சர்கோசி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், அத்துடன் ஒரு லட்சம் யூரோ அபராதம் விதித்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் நிகோலஸ் சர்கோசி நேற்று பாரிசில் உள்ள லா சாண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக சர்கோசி தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே சிறை தண்டனையை எதிர்த்து நிகோலஸ் சர்கோசி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.