ஆதாரங்கள் இல்லை.. டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!!
டெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது பொதுப்பணித் துறையில் ஊழல் தொடர்பாக அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் மற்றும் அதிகாரிகள் மீது 2018ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொதுப்பணித் துறையில் முறைகேடாக ஆள்களை சேர்த்தல், நிதி முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் எந்த குற்றச்செயலோ அல்லது அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்களோ நிரூபிக்கப்படவில்லை என்று இதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய சிபிஐ கோரியுள்ளதாகவும் நீதிபதி திக் வினய் சிங் கூறினார்.
பண ஆதாயம், சதி அல்லது ஊழல் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் சிபிஐ கண்டுபிடிக்கவில்லை என்றும் ஏதேனும் புதிய ஆதாரங்கள் கிடைத்தால், இந்த வழக்கை மேலும் விசாரிக்க சிபிஐக்கு சுதந்திரம் இருக்கும் என்றும் கூறிய நீதிபதி, சிபிஐ-யின் இறுதி அறிக்கையை ஏற்று வழக்கை முடித்துவைத்தார். மேலும், ஒருவரைக் குற்றம் சாட்டுவதற்கு வெறும் சந்தேகம் மட்டும் போதாது; குறைந்தபட்சம் ஆதாரம் வேண்டும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.