அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மீதான ஆள் கடத்தல், மிரட்டல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மீதான ஆள் கடத்தல், மிரட்டல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிவகாசி சக்தி நகரை சேர்ந்தவர் தொழிலதிபர் கம்மாபட்டி ரவிச்சந்திரன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு சாத்தூர் தொகுதி அதிமுக முன்னால் எம்.எல்.ஏ.ராஜவர்மன் உள்ளிட்டோருடன் சேர்ந்து ஒரு பட்டாசு ஆலையை விலைக்கு வாங்கி நடத்திவந்தனர். இந்த நிலையில், 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜவர்மன் உள்ளிட்டொர் பட்டாசு ஆலை தொழிலில் இருந்து விலகியுள்ளனர். இந்த நிலையில் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னை கடத்திவந்து ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாக ராஜவர்மன் உள்ளிட்டோருக்கு எதிராக ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம், முன்னால் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன், அதிமுக நிர்வாகி தங்கம் முனியசாமி, நரிக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஐ.ரவிசந்திரன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தவிட்டனர்.
அதன்படி ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும், கடந்த 2024-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது 3 ஆண்டுகள் தாமதாமாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அக்.8-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என அவரது தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரக்கூடிய விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து மட்டும் விளக்களித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.