விஜய்க்கு ஆசை காட்டி கெஞ்சும் அதிமுக மாஜி
மதுரை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார், நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: சிபிஐ விசாரணை மூலம் கரூர் சம்பவத்தில் ஏற்பட்ட சோகத்துக்கு யார் காரணம் என்பது தெளிவாக வரும். டிடிவி.தினகரன் கருத்தை யாரும் பெரிதுப்படுத்த வேண்டாம்.
எடப்பாடி பழனிசாமி மைதானத்தில் ஓடி வெற்றிக்கான கோப்பையை பெறும் நிலையில் உள்ளார். ஆனால் மைதானத்தில் வேடிக்கை பார்ப்பவர் தான் டிடிவி.தினகரன். அவரது பேச்சு வேகாத பேச்சு, வெட்டிப்பேச்சு. நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். சரியான நேரத்தில், சரியான முடிவு எடுத்தால்தான் ஜெயிக்க முடியும், இல்லையென்றால் வேறுவிதமாக அமைந்துவிடும்.
நடிகர் சிரஞ்சீவி தனிக்கட்சி தொடங்கி சரியாக முடிவெடுக்கவில்லை. ஆனால், பவன் கல்யாண் சரியான முடிவு எடுத்து, இன்றைக்கு ஆந்திராவில் துணை முதலமைச்சராக உள்ளார். இன்றைக்கு விஜய் நல்ல முடிவை எடுப்பார் என்று மக்களும், அவரது தொண்டர்களும் உள்ளார்கள். அவருக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அதை அவர் நழுவ விடக்கூடாது. அதிமுகவுடன் அவர் பயணம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.