வனத்துறை அனுமதியுடன் செங்காடு சாலை அமைப்பு: 30 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு
திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் இள்ளலூர் ஊராட்சியில் செங்காடு, பெரியார்நகர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த 2 கிராமங்களுக்கும் வனப்பகுதியை கடந்தே செல்லவேண்டும். மண் மற்றும் ஜல்லி கலந்து போடப்பட்டுள்ள சாலை தற்போது புழக்கத்தில் இருந்தாலும் புதிய சாலை அமைக்க வனத்துறை தடை விதித்து இருந்தது. இதனால், 30 ஆண்டுகளாக புதிய சாலை அமைக்க முடியாத நிலை இருந்தது. செங்காடு கிராமத்தில் ஏராளமானோர் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கத்தரி, வெண்டை, பூசணி, சுரைக்காய், அவரை போன்றவற்றை பயிரிட்டு அவற்றை திருப்போரூர், செங்கல்பட்டு தாம்பரம், கோயம்பேடு ஆகிய இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். விவசாய நிலங்களுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து, கால்நடை உபகரணங்கள் போன்றவற்றை திருப்போரூரில் இருந்து வாங்கி பயன்படுத்துகின்றனர். கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கும், விவசாய விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்து செல்வதற்கும் திருப்போரூர் மற்றும் செங்காடு இடையேயான சாலை முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்த சாலை போடப்படாமல் இருந்ததால் காலவாக்கம் சென்று சுற்றி வரவேண்டிய நிலை இருந்தது. திருப்போரூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம், அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் அலுவலகம், மின்வாரிய அலுவலகம், கந்தசுவாமி கோயில் ஆகிய இடங்களுக்கு செல்ல முக்கிய வழித்தடமான இந்த சாலைக்கு வனத்துறை விதித்துள்ள தடையை நீக்கி புதிய சாலை அமைத்து தரவேண்டும். அதேபோன்று பெரியார்நகர் குடியிருப்புக்கு செல்லும் சாலையையும் புதியதாக அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எல்.இதயவர்மன் தலைமையில், ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறை யிடமிருந்து ஆட்சேபணை இல்லா கடிதம் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, முதலமைச்சர் கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் 52 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த மாதம் பணிகள் நடைபெற்று தற்போது பணி முடிவுற்றுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டு காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளதாக பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.