நீலகிரியில் 12 பேரை பலி வாங்கிய ஆட்கொல்லி யானையை பிடிக்க வனத்துறை உத்தரவு: மேலும் 2 கும்கிகள் வரவழைப்பு
கூடலூர்: நீலகிரியில் 12 பேரை பலிவாங்கிய ஆட்கொல்லி யானையை பிடிக்க வனத்துறை நேற்று உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து மேலும் 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட கிளன்வன்ஸ், திருவள்ளுவர் நகர், சுபாஷ் நகர், ஆரூற்றுப்பாறை, பாரதி நகர், டெல் ஹவுஸ், கெல்லி, குயின்ட் உள்ளிட்ட விவசாய பகுதிகள், மக்கள் குடியிருப்புகள், தனியார் தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக சுற்றி திரியும் ராதாகிருஷ்ணன் என்ற யானை இதுவரை 12 மனித உயிர்களை பலி வாங்கி உள்ளது.
இந்த யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் அருகில் உள்ள காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்குள் பகல் நேரத்தில் மறைந்து இருந்து இரவு நேரத்தில் கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகிறது. ஆட்கொல்லி யானையை பிடித்துச் செல்ல வேண்டும் என இப்பகுதி உள்ள சமூக ஆர்வலர்கள் சென்னையில் வன உயிரின முதன்மை பாதுகாவலர் டோக்ராவை சந்தித்து மனு அளித்தனர். மேலும் வனவிலங்குகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க கோரி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இந்த யானையை பிடிப்பதற்கு நேற்று வன உயிரின பாதுகாவலர் வனத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கூடலூர் கோட்ட வனத்துறையினர் யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கி உள்ளனர்.
ஏற்கனவே அப்பகுதியில் இரண்டு கும்கி யானைகள் ராதாகிருஷ்ணன் யானையை கண்காணிக்க நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு முதுமலையிலிருந்து பொம்பன் மற்றும் சங்கர் ஆகிய இரண்டு கும்கி யானைகள் இப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து யானையை பிடிப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இது வரை 12 பேரை தாக்கிக் கொன்ற ராதாகிருஷ்ணன் யானையை பிடிக்க உத்தரவு வழங்கிய வன உயிரின முதன்மை பாதுகாவலருக்கு ஓவேலி பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.