தர்மபுரி மாவட்ட வனகிராமங்களில் கள்ளத் துப்பாக்கிகளை ஒப்படைக்க வனத்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட வன கிராமங்களில் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள், தாங்களாக முன்வந்து ஒப்படைத்தால், தண்டனை மற்றும் வழக்கும் இல்லை. ஆனால் நாங்களாக தேடி கள்ளத்துப்பாக்கி கண்டறியப்பட்டால், அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என வனத்துறை மூலம் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில், அதிக வனக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விளை நிலங்களில் பயிர்களை பாதுகாக்கவும், வனவிலங்குகளை விரட்டவும், கிராமபுறங்களில் அனுமதி பெற்று சிலர் நாட்டு துப்பாக்கி வைத்துள்ளனர். ஆனால் அனுமதி இல்லாமல், பலர் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பதாக மாவட்ட வனத்துறை, காவல்துறைக்கு புகார்கள் வருகிறது.
அந்த முகவரில் தேடிச்சென்று பார்த்தால் கள்ளத்துப்பாக்கி வைத்திருக்கும் நபர் சிக்குவதில்லை. ஆனால், மலை மற்றும் வனத்தில் வசிக்கும் மக்கள் சர்வ சாதரணமாக கள்ளத்துப்பாக்கிகளை வேட்டைக்கு தூக்கிக்கொண்டு செல்வதை காணமுடிகிறது. சிலர் பாறை இடுக்கு, புதர்களில் இந்த துப்பாக்கிகளை மறைத்து வைத்து வேட்டைக்கு போகும்போது பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தர்மபுரி மாவட்ட வனத்துறை, கள்ளத்துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைக்கும் படியும், அவ்வாறு ஒப்படைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என தெரிவித்தது. ஆனாலும் பலர் கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைக்கவில்லை.
இதையடுத்து வனத்துறையினர் கிராமம் கிராமமாக நேரில் சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்து கள்ளத்துப்பாக்கிக்களை ஒப்படைக்கும்படி கேட்டு வருகின்றனர். மேலும் கிராமங்களில் கலைக் குழுவினர் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று பாலக்கோடு வனச்சரகத்தில் வனத்துறையினர் கலைக் குழுவினருடன் கிராமங்களுக்குள் சென்று ஒலிபெருக்கி மூலமும், துண்டு பிரசுரம் விநியோகம் செய்து அறிவிப்பு செய்தனர்.
அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது: அரசின் அனுமதியின்றி துப்பாக்கி, வெடி மருந்துகள், வாய் வெடி, கன்னிவலை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாங்களாக முன்வந்து அதை ஒப்படைத்தால் தண்டனை இல்லை. வழக்கும் இல்லை. ஆனால் கள்ளத்துப்பாக்கி கண்டறியப்பட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அரசிற்கு பரிந்துரை செய்யப்படும்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் மின்வேலி அமைத்தால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மின் இணைப்பை துண்டிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும். கள்ளத்துப்பாக்கி வனவிலங்கு வேட்டை, மின்வேலி அமைத்தல் வனக்குற்றங்கள் பற்றி தகவல் தெரிவிக்கவும், தகவல் அளிப்பவகள் பெயர் ரகசியமாக காக்கப்படும். தகவல் அளிக்க : வனச்சரக அலுவலர், பாலக்கோடு வனச்சரகம், பாலக்கோடு. செல் நம்பர்- 9943941313, 9345060134, 9843522343, 7339550107, 9445518188 தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த நோட்டீசில்
கூறப்பட்டுள்ளது.