தமிழர் பாரம்பரிய உடை அணிந்து தஞ்சையில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழர் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழா கொண்டாடினர். அவர்களுக்கு மேளதாளங்களுடன் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், மத்திய அரசு சுற்றுலா அமைச்சகம் தெற்கு மண்டலம் மற்றும் தமிழக அரசு சுற்றுலா துறை சார்பில் தஞ்சாவூர் அருகில் நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் பொங்கல் விழா ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளை சார்ந்த 75க்கும் மேற்பட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மங்கள இசையுடன் பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்டு இயற்கை சூழலில் தென்னந்தோப்பில் வாழை இலையில் 25 வகையான அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. வெளிநாட்டு பயணிகள் நமது பாரம்பரிய ஆடைகளான வேட்டி, சேலை அணிந்து கொண்டு அனைவருடனும் அமர்ந்து உணவை ரசித்து ருசித்து சாப்பிட்டனர்.
நடன குதிரை நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தது. அங்கு தோப்பில் ஜல்லிக்கட்டு காளைகள், சண்டை ஆடுகள், சண்டை சேவல்கள், நாட்டு இன நாய்க்கள், பந்தய குதிரை வண்டி, பந்தய மாட்டு வண்டி உள்ளிட்டவை காட்சி படுத்தப்பட்டிருந்தது. அனைவரும் அவற்றுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
கிராம எல்லையில் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மாலை அணிவித்து வரவேற்றார். இதில் அனைவரும் மாட்டு வண்டியில் நாஞ்சிக்கோட்டை கிராம வீதிகளில் மேல தாளத்துடன் வளம் வந்தனர்.
அங்கு வீதிகளில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வீட்டின் வாசலில் உரல், அம்மி, ஆட்டுக்கல் போன்ற பழமையான வீட்டு உபயோக பொருட்களை காட்சிப்படுத்தி அதில் நெல் இடித்தும் காட்டினர். தமிழக பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுலா பயணிகள் பங்கேற்று நடனமாடி உற்சாகமடைந்தனர்.