வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்: ஊட்டியில் உரிமையாளர் கைது
பெரம்பூர்: சென்னையில் உள்ள வீட்டில் பதுக்கிவைத்து வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்துவந்த உரிமையாளரை ஊட்டியில் கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு கிடைத்த தகவல்படி, கடந்த 31ம்தேதி போலீசார் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் மேற்கு அவென்யூ சாலை 2வது பிளாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது கீழ் தளத்தில் உள்ள அறையில் பெட்டி, பெட்டியாக பதுக்கிவைத்திருந்த வெளிநாட்டு மதுபானங்களை பறிமுதல் செய்தனர். இதுசம்பந்தமான வீட்டின் உரிமையாளர் மதனை தேடி வந்தனர்.
இந்தநிலையில், ஊட்டியில் மதன் இருப்பதாக கிடைத்த தகவல்படி, உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் ஊட்டிக்கு சென்று கோத்தகிரியில் பதுங்கியிருந்த மதனை கைது செய்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், விமானங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களிடம் இருந்து மதுபானங்களை வாங்கி மொத்தமாக பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.