வெளிநாட்டிற்கு தங்கம் ஏற்றுமதியில் மோசடி; 5 சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு: 2020 முதல் 3 ஆண்டுகள் மோசடி அம்பலம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தங்க நகைகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ததில் பெருமளவு மோசடிகள் நடந்த விவகாரத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 5 சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட 13 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். சென்னை விமான நிலைய கார்கோ பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு, மத்திய வருவாய் புலனாய்வு துறை எனப்படும் டிஆர்ஐ அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்பட இருந்த 4 சரக்குகள் பில்களில் முரண்பாடுகள் இருந்ததை டிஆர்ஐ கண்டுபிடித்தது. இதையடுத்து அந்த 4 பில்களுக்கான தங்க நகைகள் பார்சல்களை விமானங்களில் ஏற்றுவதை டிஆர்ஐ தடுத்து நிறுத்தியது. அதோடு அந்த தங்க நகைகளை ஆய்வு செய்தபோது பித்தளை மற்றும் செம்பு நகைகளுக்கு தங்கம் முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்று தெரிய வந்தது. மற்றொரு சரக்கு பில்லில் இருந்த நகைகள் தரம் குறைந்த 21 கேரட் நகைகள் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2020ம் ஆண்டு தொடங்கி 2022ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் மோசடிகள் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளதும், இதில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய நிதி அமைச்சகத்திற்கு ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் நிதி வருவாய் இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது. அதோடு இதில் சென்னை விமான நிலைய கார்கோ பிரிவுகளில் பணியாற்றும் சுங்கத்துறை உயர் அதிகாரிகள் சிலரும் சம்பந்தப்பட்டுள்ளதும் தெரியவந்தது.இதையடுத்து, இந்த வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கு குறித்து, விசாரணை நடத்துவதற்கும், இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து, எப்ஐஆர் பதிவு செய்யவும் ஒன்றிய அரசு சிபிஐக்கு அனுமதி வழங்கியது.
இதையடுத்து சென்னை விமான நிலைய கார்கோ பிரிவில் 2020ல் இருந்து 2022 வரையில் பணியில் இருந்த சுங்கத்துறை சூப்பிரண்டுகள் ஜே.சுரேஷ்குமார், அலோக்ஷுக்லா, பி.துளசிராம், நகைகள் மதிப்பாய்வாளர் என் சாமுவேல் தீபக் அவினாஷ் மற்றும் சுங்கத்துறை ஏஜென்ட் மாரியப்பன் ஆகிய 5 சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் தங்க நகைகள் தயாரிப்பாளர்கள் தீபக் சிரோயா, சந்தோஷ் கோத்தாரி, சுனில் பர்மார், சுனில் ஷர்மா மற்றும் சுனில் ஜுவல்லரி, கல்யாண் ஜுவல்லரி, சிரோயா ஜுவல்லரி பாலாஜி ஜுவல்லரி ஆகிய 13 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக எப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது வெளிநாடுகளில் இருந்து சுத்தமான 24 கேரட் தங்க கட்டிகளை 0% சுங்க வரியில்லாமல் இறக்குமதி செய்து, டிஎப்ஐஏ (Duty-free Import Authorisation) என்ற திட்டத்தை தவறாக பயன்படுத்தி, சுத்தமான தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, போலி தங்க ஆபரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, சுமார் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்து, ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 30ம் தேதி காலையில் இருந்து, ஒரே நேரத்தில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை கார்கோ அலுவலகம் மற்றும் பல்லாவரம், ஆலந்தூர், நங்கநல்லூர், அண்ணா நகர் ஆகிய இடங்களில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் மற்றும் சென்னை பூக்கடை, சவுகார்பேட்டை, கொண்டித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள தங்க நகை கடைகள், தங்க நகைகள் உற்பத்தியாளர்கள் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும், சென்னை விமான நிலைய கார்கோ பகுதி சுங்கத்துறை அலுவலகத்தில், நகைகளை மதிப்பீடு செய்யும் நவீன கருவியையும் (XRF Spectro Meter) ஆய்வு மேற்கொண்டனர். சிபிஐ அதிகாரிகள் சோதனைகள், தொடர்ந்து நடந்தது. இந்த சோதனைகளில் மோசடிகள் குறித்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மோசடி வழக்கில் தற்போது எப்ஐஆரில், 5 சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட 13 பேரும் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் சிலர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு இந்த வழக்கில் சிக்கிய சிலரை சிபிஐ அதிகாரிகள், கைது செய்து விசாரணை மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த மோசடியில், மூன்று ஆண்டுகளில் மொத்தம் எவ்வளவு பணம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கிடைத்துள்ளது. அந்த பணத்தை அவர்கள் எதில் முதலீடு செய்துள்ளனர் என்பதை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் 5 பேர் உள்பட 13 பேர் மீது சிபிஐ எப்ஐஆர் போட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தும் சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.