ஒரு வாரம் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் ஜெர்மன், இங்கிலாந்து புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்: தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடு வரும் என நம்பிக்கை
சென்னை: தமிழ்நாட்டுக்கு அதிகளவு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு வார சுற்றுப்பயணமாக புறப்பட்டு சென்றார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்று, வழியனுப்பி வைத்தனர். தமிழ்நாட்டுக்கு அதிகளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருவார காலம் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக, நேற்று காலை 9.50 மணியளவில் சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலமாக புறப்பட்டு, துபாய் வழியாக ஜெர்மனிக்கு சென்றார்.
ஜெர்மனியில் இன்று (31ம் தேதி) வெளிநாடுவாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள ‘என்ஆர்டிஐஏ ஐரோப்பா சந்திப்பு’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பின்னர், கெலோன் நகரில் 3 மணி நேரம் நடைபெறும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் பங்கேற்று, வெளிநாட்டு முதலீட்டாளர்களை தமிழகத்தில் அதிகளவு முதலீடு செய்து தொழில்களை துவங்கும்படி அவர் அழைப்பு விடுக்கிறார். இதை தொடர்ந்து, வரும் செப்டம்பர் 1ம் தேதி ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானம் மூலமாக செல்கிறார்.
அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வரும் 2 மற்றும் 3ம் தேதிகளில் தொழில் முனைவோர்களை அவர் சந்தித்து கலந்துரையாடுகிறார். 4ம் தேதி (வியாழன்) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவ படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். அதோடு, உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நல அமைப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். லண்டனில் வரும் 6ம் தேதி அயலக தமிழர் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். பின்னர் 7ம் தேதி ஒரு வார வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, லண்டனில் இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் மூலமாக புறப்பட்டு, 8ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேடியாக சென்னை திரும்ப திட்டமிடப்பட்டு உள்ளது.
மாற்றுத்திட்டமாக, லண்டனில் இருந்து வரும் 7ம் தேதி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு துபாய் வருகிறார். பின்னர், அங்கிருந்து மற்றொரு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக 8ம் தேதி (திங்கள்) காலை 8 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு திரும்பி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக 2 பயண திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு நேற்று காலை 8.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால், புதிய டிஜிபி வெங்கட்ராமன், போலீஸ் கமிஷனர் அருண், சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அரசு அலுவலர்கள் திரண்டு வந்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் இன்று (நேற்று) என்னுடைய பயணத்தை மேற்கொள்கிறேன். செப்டம்பர் 8ம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்பி வருகிறேன். இந்த பயணத்தில் தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு இதுவரைக்கும் 10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம். இதன்மூலமாக 32 லட்சத்து 81 ஆயிரத்து 32 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதில், பெரும்பாலான திட்டங்கள் நிறைவடைகின்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கிவிட்டார்கள். இந்த வளர்ச்சி வந்திருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு ஒன்றிய அரசு வெளியிடுகின்ற புள்ளி விவரங்களே ஆதாரமாக இருக்கிறது. என்னுடைய ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும், தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாக, திறமையான இளைஞர்கள் இருக்கின்ற மாநிலமாக, வாய்ப்புகளை ஊக்குவிக்கின்ற மாநிலமாக திராவிட மாடல் ஆட்சியில் உயர்ந்திருக்கின்ற காரணத்தால், தரவுகளுடன் எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருக்கிறேன்.
இதுவரைக்கும், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு,
* அமெரிக்க பயணத்தில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
* ஸ்பெயின் பயணத்தில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
* ஜப்பான் பயணத்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
* ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
* சிங்கப்பூரில் ஒரு ஒப்பந்தம் என்று 30 ஆயிரத்து 37 பேருக்கு வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யும் 36 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.18,498 கோடிக்கான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது. இந்த 36 ஒப்பந்தங்களில், 23 திட்டங்கள் பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத் தான் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் புறப்பட்டு செல்கிறேன். அங்கு, மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றி பிரஸ் ரிலீஸ் நான் உங்களுக்கு தரச் சொல்லியிருக்கிறேன். திரும்பி வருகிற அன்றைக்கும் நான் உங்களை சந்தித்து இதுகுறித்து விவரமாக சொல்ல இருக்கிறேன்.
இந்த பயணத்தில், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், செப்டம்பர் 4ம் தேதி, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் நடக்கின்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்கக்கூடிய ஒரு அற்புதமான நிகழ்வு நடைபெற இருக்கிறது. நாட்டிலேயே அதிவேகமாக வளர்ச்சி பாதையில் நடைபோடும் தமிழ்நாட்டை நோக்கி புதிய முதலீடுகளை ஈர்க்க செல்கிறேன். உங்களுடைய வாழ்த்துகள் எனக்கு வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் அன்போடு புறப்பட்டு செல்கிறேன். இதுபோன்ற பயணங்களால் தமிழ்நாட்டிற்கு உண்மையாகவே பலன் உண்டா? ஏனென்றால், அதிமுகவை பொறுத்தவரையில் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
அதுபற்றி...
வெளிநாட்டு பயணத்தை பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி இதுகுறித்து கூட விமர்சனம் செய்திருக்கிறார். பழனிசாமியை பொறுத்தவரைக்கும் தன்னுடைய பயணங்கள் எப்படி இருந்ததோ அப்படித்தான் இந்த பயணங்களும் இருந்திருக்கும் என்று நினைக்கிறார். ஆனால், நான் கையெழுத்திடுகின்ற அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வரப்போகின்றது,வந்திருக்கிறது. சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு குறித்து உங்களுடைய கருத்து என்ன? எந்த கருத்துக் கணிப்பு இருந்தாலும், எல்லா கருத்துக் கணிப்புகளையும் மிஞ்சி ஒரு அமோக வெற்றியைத்தான் திமுக கூட்டணி பெறப்போகிறது. அதில், எந்த சந்தேகமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
* பேச்சை குறைத்து திறமையை செயலில் காட்டுவேன்
விஜய் அரசியல் வருகை குறித்து நீங்கள் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதுகுறித்து... பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. 2026ல் திமுகவுக்கு - தவெக தான் போட்டி அணி என்று ஆணித்தரமாகவும், திட்டவட்டமாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சவாலை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? நான் அதிகம் பேசமாட்டேன். இதற்கு நான் பேசவேண்டிய அவசியமில்லை. பேச்சை குறைத்து செயலில் நம்முடைய திறமையை காட்டவேண்டும்.
* புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வருகிறார்கள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் தான் இருக்கிறது. திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
புதிய கட்சிகளும் வருகிறதோ,வரவில்லையோ; புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை.
அண்மையில் பீகாருக்கு சென்று வந்தீர்கள். பீகாரை போலவே தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
யார் எப்படிப்பட்ட சதியை செய்தாலும், அதை முறியடிக்கின்ற வல்லமை தமிழ்நாட்டிற்கு உண்டு. ஏன், பீகாரில்கூட தேர்தல் ஆணையம் நினைத்தது நடக்காது. உண்மையாகவே, நான் சென்றுவிட்டு வந்த அனுபவத்தை சொல்கிறேன். ஏனென்றால், அங்கும் மக்களை எழுச்சி பெற வைக்க தேர்தல் ஆணையம் உதவி செய்திருக்கிறது என்பதுதான் உண்மை.
* இந்த பயணமும் ஹிட் அடிக்கும்
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: உங்கள் எல்லா விருப்பங்களையும் அன்பையும் என்னுடன் சுமந்துகொண்டு ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கு செல்கிறேன். ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் அளித்த வெற்றியின் ஊக்கத்தோடு, அந்த பயணங்களால் பெறப்பட்ட முதலீடுகள் தரும் நம்பிக்கையோடு ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணமாகிறேன்... இதுவும் ஹிட் அடிக்கும்! நம்பர் 1 தமிழ்நாடு என்ற இலக்குக்கு இந்த பயணங்கள் பாதை அமைக்கும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.