வௌிநாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் ஊதியமின்றி வேலை செய்யும் ஊழியர்கள்: நிதி முடக்கம் விவகாரத்தில் அடம் பிடிக்கும் டிரம்ப்
மாட்ரிட்: அமெரிக்க அரசு செலவினங்கள் தொடர்பான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒவ்வொர் ஆண்டும் நிறைவேற்றப்படும். அண்மையில் அமெரிக்க செனட் சபையில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேற 60 சதவீத வாக்குகள் தேவை. ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்ததால், நிதி மசோதா நிறைவேற்றப்படாததால், கடந்த 38 நாள்களாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது.
நிர்வாகம் முடங்கியிருப்பது குறித்து ஜனநாயக கட்சியினருடன் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசு செலவு செய்ய பணம் விடுவிக்கப்படாததால், பல அரசு துறை ஊழியர்கள் சம்பளமின்றி வேலை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பல துறைகளில் கட்டாய பணி நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக போதிய ஊழியர்கள் இல்லாததால் விமான போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. பல நிறுவனங்களை சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளனர். இதேபோல், வௌிநாடுகளில் இயங்கும் அமெரிக்க ராணுவ தளங்களில் பணி செய்பவர்களும் ஊதியமின்றி பணியாற்றும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் உணவு சேவை, கட்டுமானம், தளவாடங்கள், பராமரிப்பு மற்றும் பிற பணிகளில் வௌிநாட்டு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது ஊதியமின்றி வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் அல்லது கட்டாய விடுப்பில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டிரம்ப்பின் பிடிவாத போக்கால் அந்த ராணுவ தளங்களில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
அதன்படி இத்தாலியில் உள்ள அமெரிக்க தளங்களில் 4,600க்கும் மேற்பட்ட இத்தாலியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கான அக்டோபர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதேபோல் போர்ச்சுக்கல் நாட்டின் அமெரிக்க ராணுவ தளங்களில் பணி செய்பவர்களுக்கும் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. ஆனால், ஜெர்மனியில் உள்ள அமெரிக்க தளங்களில் பணி புரியும் 11,000 உள்ளூர் ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.