தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் சிக்கின: டிரைவர் கைது; கார் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் சிக்கின. மரைன் போலீசார் மறித்து சோதனையிட்ட போது காரிலிருந்து குதித்த டிரைவர் கைது செய்யப்பட்டார். கார் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மரைன் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து உத்தரவின் பேரில் விளாத்திகுளம் அருகே வேம்பார் சோதனை சாவடியில் எஸ்ஐ செல்வராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை மறித்து மரைன் போலீசார் சோதனையிட்டனர். அப்போது தப்பியோட முயன்ற டிரைவரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சிகிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பதும் தெரியவந்தது. காரில் இருந்த 32 மூடைகள் பாலிதீன் பையால் பேக் செய்யப்பட்டிருந்தன. பாலிதீன் பையை திறந்து பார்த்ததில் அதில் இங்கிலாந்து நாட்டின் சிகரெட்டான, ‘‘ மான்செஸ்டர் யுனைடெட் கிங்டம்’’ என்ற பிராண்ட் சிகரெட்டுகள் இருந்தன. மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரம் சிகரெட்டுகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ. 70 லட்சம் ஆகும். விசாரணையில் நாகர்கோவிலில் இருந்து கடற்கரை சாலை வழியாக தூத்துக்குடி இந்தக் கார் வந்தது தெரியவந்தது.