ஃபுட் சேஃப்டி கனெக்ட் !
நுகர்வோரின் பாதுகாப்பிற்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ள “Food Safety Connect” செயலி குறிப்பாக இப்படியான பண்டிகை காலங்களில் மிகப்பெரும் உதவியாக இருக்கும். இந்த செயலி மூலம் நுகர்வோர் தங்களின் உணவுப் பொருட்கள் குறித்த புகார்கள், சந்தேகங்கள் மற்றும் புகைப்படங்களை நேரடியாக அதிகாரிகளிடம் அனுப்பலாம். தீபாவளி போன்ற திருவிழா காலங்களில் பல கடைகள் இனிப்பு வகைகளை அதிக அளவில் தயாரிக்கும் போது சுத்தம் மற்றும் தரத்தில் கவனக்குறைவு ஏற்படுவதுண்டு. அப்படிப் பட்ட நிலையில் Food Safety Connect செயலி நுகர்வோரின் குரலாக மாறியுள்ளது.
இந்த செயலியை Google Play Store அல்லது App Store-ல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். இதில் “Complaint” எனும் பகுதியில் கடை பெயர், பொருள் விவரம், வாங்கிய தேதி, புகைப்படம் மற்றும் பிரச்சினையின் தன்மை போன்ற தகவல்களைச் சேர்த்தால் போதும். சில நிமிடங்களில் அந்த தகவல் நேரடியாக FSSAI அலுவலகத்திற்கு சென்று விடும். அங்கிருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.இந்த செயலியின் சிறப்பம்சம், புகார் அளித்த நுகர்வோருக்கு ஒரு “reference number” வழங்கப்படும். அதன் மூலம் புகார் நிலையை பின்னரும் பார்த்துக் கொள்ளலாம். கடந்த சில ஆண்டுகளில் இந்த செயலி வழியாக பல ஆயிரம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு புகார் கருவி மட்டுமல்ல, உணவின் தரத்தை மதிப்பிடவும், மக்கள் விழிப்புணர்வுடன் உணவு தேர்வு செய்யவும் உதவுகிறது. ஏதாவது உணவகங்களில் உணவு சரி இல்லை என்றாலும் கூட இந்த செயலியை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். தீபாவளி இனிப்புகள் இனிமையோடு மட்டுமல்ல, பாதுகாப்புடனும் நம் வீடுகளுக்குள் நுழையட்டும் — அதற்கான நம்பகமான பாலம் தான் Food Safety Connect செயலி.