பார்வையற்றோருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் ஃபுட் ரிப்ஃலக்ஸாலஜி!
அம்பிகா ராஜ்.
பார்வையற்றோருக்கு இந்த ஃபுட் ரிப்ஃலக்ஸாலஜி சிகிச்சைக்கான பயிற்சிகள் அளிக்கும் எண்ணங்கள் ஏற்பட்டது எப்படி?
பார்வையற்றோருக்கென வாழ்வினில் பல்வேறு சவால்கள் இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று என்றால் அது அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் சரிவர கிடைக்காமல் இருப்பது தான். அவர்கள் உயர்கல்வியே படித்திருந்தாலும், அவர்களுக்கு ஏற்ற வேலைகள் கிடைப்பதில் பெரும் சவால்கள் இருக்கிறது. தினந்தோறும் பார்வையற்றோர் பலரும் ஓடுகின்ற இரயிலிலோ அல்லது பேருந்தில் ஏதாவது பொருட்களை விற்பனை செய்வதை பார்த்திருக்கலாம். இதனால் தவறி விழுந்து அவர்களுக்கு பெரும் விபத்துகள் நேர்வதோடு, போதுமான வருமானங்களும் கிடைப்பதில்லை. இந்த நிலையை போக்க இவர்களுக்கு இந்த பாத அழுத்த சிகிச்சை முறைகளை பயிற்றுவித்தால் என்ன என்கிற எண்ணங்கள் தோன்றியது. இதற்கு வித்திட்டவர் டாக்டர். சி. கே. அசோக்குமார் அவர்கள். இந்த திட்டத்தின் கீழ் சில பார்வையற்ற மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கான முறையான பயிற்சிகளை அளித்தோம். அவர்களால் திறம்பட இந்த வேலைகளை மிகவும் எளிதாக செய்ய முடிவதை உணர முடிந்தது. கடந்த ஜூன் மாதம் 25 அன்று துவங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு பார்வையற்றோர்களுக்கு மேல் ஃபுட் ரிப்ஃலக்ஸாலஜி சிகிச்சை முறைகள் குறித்த பயிற்சிகள் அளித்துள்ளோம்.
பார்வையற்றோருக்கு அளிக்கப்படும் பாத அழுத்த சிகிச்சைக்கான முறையான பயிற்சிகள் குறித்து சொல்லுங்கள்?
பார்வையற்ற மாணவர்களுக்கு நேஷனல் அசோசியேஷன் ஆப் பிளைண்ட் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் விஷூவலி ஹாண்டிகேப்ட் என்கிற அமைப்பு ஃபுட் ரிப்ஃலக்ஸாலஜி சிகிச்சைக்கான பயிற்சிகளை நடத்தி வருகிறது. இங்கே பார்வையற்றோருக்கு சிறப்பு பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். இந்த பயிற்சிக்கென முறையான சான்றிதழ்களையும் வழங்குகின்றனர். இந்த பயிற்சி முடித்த மாணவர்கள் அழகு நிலையம், ஹோட்டல்கள் மற்றும் பாத அழுத்த சிகிச்சை நிலையங்களில் வேலை பார்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது. அவர் உட்கார்ந்த இடத்திலிருந்தே பாதுகாப்பாக வேலைகளை செய்கிற சூழலும் அமைகிறது.
பொதுவாக பாத அழுத்த சிகிச்சை (ஃபுட் ரிப்ஃலக்ஸாலஜி) செய்து கொள்வது எதற்காக?
நமது உடலில் எந்த ஒரு பாகத்தின் வலிகளுக்குமே பாத அழுத்த சிகிச்சை நற்பலன்களை தரக்கூடியது. குறிப்பாக மன அழுத்தம், ரத்த அழுத்தம், முதுகு வலி, கால் வலி, கழுத்து வலி, மூட்டு வலி என உடலின் எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அதற்கு பாத அழுத்த சிகிச்சை சிறப்பான தீர்வாக அமையும். மிக முக்கியமாக தூக்க பிரச்னைகள் சரி செய்யப்படுவதால் செரிமான பிரச்னைகள் விலகும் இதனால் சரும
ஆரோக்கியம் மேம்படும். நமது உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் முடிவடையும் இடம் நமது உள்ளங்கால்கள் தான். அதனால் தான் உள்ளங்காலில் நாம் கொடுக்கும் சரியான மற்றும் சீரான அழுத்தமானது அந்த நரம்புகள் செல்லும் பகுதியில் உள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டையும் சீராக்குகிறது. பாதங்கள் பல நரம்புகள் சந்திக்கும் ஓர் இடம் என்பதோடு ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு உறுப்புடனும் சம்பந்தப்பட்டவை. எனவே அந்தந்த நரம்புகளுக்கு அழுத்தம் கொடுத்து ரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம் வலி மற்றும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். பாத அழுத்த சிகிச்சை அளிப்பதால் நமது உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது தூக்கத்தைத் தூண்டுவதோடு வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. மேலும், மன அழுத்தத்தைக் குறைப்பது, ரத்த அழுத்தத்தை சீராக்குவது, ஹார்மோன் பிரச்னைகளைத் தீர்ப்பது போன்ற செயல் களையும் செய்கிறது. குறிப்பாக தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இந்த சிகிச்சை முறையினை செய்து கொண்டால் நல்ல பலனை பெறலாம்.
பார்வையாளர்கள் பாத அழுத்த சிகிச்சை செய்வதின் சிறப்பம்சங்களாக எதனை பார்க்கிறீர்கள்?
பொதுவாகவே சாதாரண மக்களை விட பார்வையற்றோருக்கு தொடு திறனும் கேட்கும் திறனும் அதிகம் இருக்கும். இவர்கள் பாதங்களில் அழுத்தங்கள் தரும்போது அது கூடுதல் பலன்களை தரும். மேலும் இதற்கென நாங்களே ஸ்பெஷலாக தயாரித்த மூலிகை எண்ணெய்களை கொண்டு மட்டுமே இந்த பாத அழுத்த சிகிச்சை முறைகளை செய்கிறோம். இவை முப்பது வகையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது. அதே போன்று இதற்கு பயன்படுத்தப்படும் மூலிகை எண்ணெய் உடல்வலி உட்பட வலிகளை போக்கும் திறன் கொண்டவை. இந்த பாத நிவாரண சிகிச்சை முறையில் பாத வெடிப்புகளுக்கான ஸ்பெஷல் கிரீமை உபயோகித்து வருவதால் பாதங்கள் பட்டு போல இருக்கும். இவையெல்லாமலே ஹெர்பல் தயாரிப்புகள் என்பதால் இந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்வோருக்கு சிறந்த புத்துணர்ச்சி கிடைக்கும்.
இந்த சிகிச்சைக்கு பார்வையற்றோருக்கான வாய்ப்புகள் எங்கு எப்படி கிடைக்கிறது?
தற்போது நிறைய ஸ்டால்கள் அமைத்து இவர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கி தருகிறோம். மேலும் பத்து லட்சம் பேருக்கு மேல் நடந்து செல்லும் திருவண்ணாமலை கிரிவல பாதைகளில் ஸ்டால் அமைத்து கொடுத்தது நிறைய பார்வையற்றோருக்கு உதவிகரமாக இருந்தது. கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய ஹோட்டல்கள், வணிக வளாகங்களில் இவர்களுக்கான நல்ல வேலை வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. இந்த மாதிரியான நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தைகள் மூலம் அவர்களுக்கான பணியிடங்களை உருவாக்க முயன்று வருகிறோம். அவற்றில் சிலவற்றில் வேலை வாய்ப்புகளை வாங்கி தந்தும் உள்ளோம். இதனால் பார்வையற்றோருக்கு கணிசமான வருமானம் கிடைத்தும் வருகிறது. தெரபி சென்டர்கள், மனநல ஆலோசனை மையங்களில் பாத நிவாரண சிகிச்சைகளுக்கான நல்ல வரவேற்புகள் கிடைக்கிறது.
இதற்கென எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து..
வெளிநாடுகளில் ஃபுட் ரிப்ஃலக்ஸாலஜி துறை குறித்த விழிப்புணர்வு நிறைய இருக்கிறது. இந்தியாவில் இன்னமும் இது குறித்த விழிப்புணர்வை நிறைய ஏற்படுத்த வேண்டிய தேவைகள் இருக்கிறது. குறைந்தபட்சம் ஆயிரம் பார்வையற்றோருக்கு இந்த வகையில் பாதுகாப்பான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துவிட வேண்டும் என்பதே எங்களது முக்கிய நோக்கமாக நினைத்து செயல்பட்டு வருகிறோம். இதற்காக எங்களது குழுவினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நிறைய இடங்களில் பார்வையற்றோருக்கான வேலைவாய்ப்பு முறைகள் குறித்து பேசி வருகிறோம். நிறைய நிறுவனங்கள் இதற்கு செவிசாய்த்து கருணை அடிப்படையில் உதவியும் வருகிறது. விழியிழந்தோருக்கு கௌரவமான வேலைவாய்ப்பினை உருவாக்கி தருகிறோம் என்கிற மனநிறைவும் மகிழ்ச்சியும் எங்களது அடுத்தகட்ட பணிகளுக்கு உந்துதலாக இருக்கிறது என்கிறார் சமூக சேவகி அம்பிகா ராஜ்.
- தனுஜா ஜெயராமன்.