இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 44 பேரிடம் ரூ.3.50 கோடி மோசடி: கணவன், மனைவி கைது
வேலூர்: இந்திய உணவு கழகமான எப்சிஐயில் வேலைவாங்கித்தருவதாக கூறி பெண் உட்பட 44 பேரிடம் ரூ.3.50 கோடி வரை மோசடி செய்த கணவன், மனைவியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருதியை சேர்ந்தவர் மஞ்சுளா(45). இவரது மகள் லிகிதா. இவர் திருமணமாகி ஆந்திர மாநிலம் சித்தூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மஞ்சுளாவிடம் 2023ல் நண்பர் ஒருவர் மூலம் காட்பாடி அடுத்த இளையநல்லூரை சேர்ந்த ஈசாக்(66), அவரது மனைவி லதாமேரி(53) ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். அவர்கள் மஞ்சுளாவின் மகள் லிகிதாவுக்கு இந்திய உணவு கழகத்தில் உதவி மேலாளர் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.17 லட்சத்தை பெற்றுள்ளனர்.
பல மாதங்களுக்கு பிறகு லிகிதாவுக்கு இந்திய உணவு கழகத்தில் உதவி மேலாளருக்கான பணியாணையை ஈசாக்கும், லதா மேரியும் வழங்கியுள்ளனர். அந்த ஆணையுடன் லிகிதா இந்திய உணவு கழகத்திற்கு சென்றபோது, அது போலியானது என்று தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளா, தான் கொடுத்த ரூ.17 லட்சத்தை திருப்பி கொடுக்கும்படி தம்பதியிடம் கேட்டுள்ளார். அவர்கள் உடனடியாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அளித்துள்ளனர். அதை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. மோசடி செய்யப்பட்டதை அறிந்த மஞ்சுளா வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஈசாக், அவரது மனைவி லதாமேரியை நேற்று கைது செய்து நடத்திய விசாரணையில், மஞ்சுளாவை போன்று 44 பேரிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3.50 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.