தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் சார்பில் 941 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை 941 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கி, நாட்டுப்புறக் கலைகளை வளர்க்கவும், மக்களிடையே அக்கலைகளை பிரபலப்படுத்தவும், இக்கலைகளை அழியாமல் பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் 2007-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அவ்வாரியத்தின் வாயிலாக, வாரிய உறுப்பினர்களாக உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை போன்ற பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாரியத்தில் தற்போது 55,910 நாட்டுப்புறக் கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை 1023 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 51 லட்சத்து
58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 2023-24ஆம் ஆண்டிற்கான கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில், நாட்டுப்புறக் கலைஞர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் அனைத்து நலத் திட்டங்களையும் தொய்வின்றி செயல்படுத்திடும் வகையில் நலத்திட்டத்திற்கான நிதி மற்றும் பணியாளர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட நிருவாகச் செலவுகளுக்கான தொடர் ஒதுக்கீட்டு நிதியினை ரூ.35 இலட்சத்திலிருந்து ரூ.1 கோடி ரூபாயாக உயர்த்தி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் நல உதவிகள் கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியான 941 நாட்டுப்புறக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக, 10 நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் அவர்களது மரபுரிமையினருக்கு கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மூக்கு கண்ணாடி நிதியுதவி, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவிக்கான 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்தர மோகன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.ஆர். காந்தி, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரிய செயலாளர் ஜி. விமலா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.