ஒரே நேரத்தில் 20 மேம்பாலம் கட்ட ‘நகாய்’ அனுமதி; ஆமை வேகத்தில் நடக்கும் பணி: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
* பண்டிகை விடுமுறைக்கு செல்பவர்கள் பரிதவிப்பு, 2 மடங்கு பயண நேரம் ஆவதால் மக்கள் அவதி
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை வசதி இன்றியமையாதது. அதேசமயம் நாட்டில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கும், அதிகரிக்கும் வாகன போக்குவரத்துக்கும் தேவையான கட்டமைப்புகளுடன் இந்த சாலைகள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் விபத்துகள் குறைப்பு, போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுவது மட்டுமின்றி பயண நேரத்தையும் சேமிக்க முடியும். ஒன்றிய அரசு தேசிய நெடுஞ்சாலைத்துறை (நகாய்) மூலம் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தாலும் தமிழகத்தில் இதன் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.
பல முக்கிய நகரங்களுக்கான சாலைகளுக்கு நிதி ஒதுக்காமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் குறையவில்லை. தமிழக தலைநகரான சென்னையிலிருந்து, தென்மாவட்டங்கள் மற்றும் கொங்கு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஒரே பிரதான சாலையாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. தமிழகத்தில் திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களுக்கு செல்ல இந்த சாலையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
கோவை, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி செல்லும் மக்கள் உளுந்தூர்பேட்டை வரை இந்த தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி கேரள மாநிலத்துக்கு செல்லும் நான்கு வழிச்சாலையாக உள்ள இச்சாலை எப்போதும் படுபிசியாகவும், பரபரப்பாகவும் காணப்படும். குறிப்பாக முகூர்த்த நாட்கள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை, அரசு விடுமுறை நாட்களில் இந்த சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதை காண முடியும். சென்னை எல்லையை தாண்டியதும் திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, வேப்பூர், தொழுதூர் வரை தொடர் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
இந்நிலையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது போதிய இணைப்பு சாலைகள், முக்கிய இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டாததால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதனை குறைக்கவும், தடுக்கும் வகையிலும் சாலை பாதுகாப்பு கமிட்டி ஆய்வு செய்து அளித்த அறிக்கையின்படி முக்கிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் தற்போது படிப்படியாக கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக திண்டிவனம் முதல் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, தொழுதூர் வரையிலான சாலைகளில் முக்கிய சந்திப்பு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்ட ஆய்வு செய்து கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டேரிப்பட்டு, செஞ்சி புறவழிச்சாலை, விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. தற்போது திண்டிவனம், விக்கிரவாண்டி, விழுப்புரம் அய்யூர் அகரம், அரசூர் உள்ளிட்ட அடுத்தடுத்த இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. ஆனால் ஆமை வேகத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக தொடர் விடுமுறை, பண்டிகை விடுமுறையின்போது இந்த கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த தீபாவளி பண்டிகைக்கு சனி, ஞாயிறு, திங்கள் (தீபாவளி பண்டிகை) அதற்கடுத்த நாளும் அரசு விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து லட்சக்கணக்கான கார், வேன், பேருந்துகள் கடந்த 3 நாட்களுக்கு மேலாக தென்மாவட்டங்களை நோக்கி படையெடுத்து செல்கின்றன.
செங்கல்பட்டு சுங்கச்சாவடியை கடந்து வாகனங்கள் செல்லும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியிலிருந்து வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்த வண்ணம் திருச்சியை நோக்கி செல்கிறது. திண்டிவனம், விக்கிரவாண்டி, அரசூர் என விழுப்புரம் மாவட்டத்தை கடந்து செல்லவே 2,3 மணி நேரம் ஆகிவிடுகிறது. ஒரு மணி நேரத்தில் மாவட்ட எல்லையை கடந்து செல்லும் நிலையில், தற்போது 2 மடங்கு நேரம் ஆகிறது. அதேபோல் சென்னையிலிருந்து விழுப்புரம் இரண்டரை மணி நேரத்தில் செல்ல முடியம். ஆனால் தற்போது 4 முதல் 5 மணி நேரம் ஆகிவிடுகிறது.
விழுப்புரம் மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டம் வேப்பூர், தொழுதூரை கடக்க நீண்ட நேரம் ஆகிறது. ஏற்கனவே வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் தற்போது ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த உயர்மட்ட மேம்பால பணிகளை கிடப்பில் போட்டு ஆமை வேகத்தில் மேற்கொண்டு வருவதால் பண்டிகை நேரத்தில் மக்கள் சொந்த ஊர்களுக்கு பரிதவித்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும்போது இந்த அவலநிலையை மக்கள் சந்திக்கின்றனர்.
இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறை தரப்பில் கூறுகையில், ‘சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது. வழக்கமாக வெள்ளி, சனி, ஞாயிறு என வாரந்தோறும் தற்போது தென்மாவட்டங்களுக்கும், விடுமுறை முடிந்து சென்னை மார்க்கத்துக்கும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. சுங்கச்சாவடிகளில் நெரிசலை தடுக்க கூடுதல் கவுண்டர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது பண்டிகை விடுமுறை தினங்களில் நெரிசல் ஏற்பட்டதற்கு காரணம் செங்கல்பட்டு அடுத்த படாளம் முதல் திண்டிவனம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்ட பகுதி தேசிய நெடுஞ்சாலைகளில் 20 இடங்களுக்கு மேல் உயர்மட்ட மேம்பாலப்பணிகள் நடக்கிறது. ஒரே நேரத்தில் இந்த பணிகளை தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 7 இடங்களில் இந்த பணிகள் நடக்கிறது. மேலும் ஒரு இடத்தில் தொடங்கியபோது நாங்கள் நெரிசலை காரணம் காட்டி நிறுத்தியுள்ளோம். இந்த உயர்மட்ட மேம்பால பணிகள் 20 இடங்களுக்கு மேல் தொடங்கி சாலைகள் குறுகளாக இருப்பதுதான் வாகனங்கள் செல்ல முடியாமல் இதுவரை இல்லாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதற்கு காரணம்’ என்று கூறியுள்ளனர்.
* பெஞ்சல் புயல் வெள்ளத்தில் துண்டிக்கப்பட்ட சாலை...
தமிழகத்தின் பிரதான சாலையாக உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயற்கை பேரிடர் மற்றும் ஏதாவது விபத்துக்கள் ஏற்பட்டாலோ இந்த சாலை முழுவதுமாக போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை உள்ளது. கடந்த ஜனவரி மாதம் பெய்த பெஞ்சல் புயல், வெள்ளத்தில் விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியில் 2 அடிக்கு மேல் வெள்ளம் சென்றதால் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது.
இதனால் தென்மாவட்டங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதுபோன்ற இயற்கை பேரிடர் மட்டுமின்றி இந்த சாலையில் பெரும் விபத்துகள் ஏற்பட்டாலும் தென்மாவட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண புதிய திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
* திண்டிவனம், விக்கிரவாண்டி, அரசூர் என விழுப்புரம் மாவட்டத்தை கடந்து செல்லவே 2,3 மணி நேரம் ஆகிவிடுகிறது. ஒரு மணி நேரத்தில் மாவட்ட எல்லையை கடந்து செல்லும் நிலையில், தற்போது 2 மடங்கு நேரம் ஆகிறது. அதேபோல் சென்னையிலிருந்து விழுப்புரம் இரண்டரை மணி நேரத்தில் செல்ல முடியம். ஆனால் தற்போது 4 முதல் 5 மணி நேரம் ஆகிவிடுகிறது.
* ஆய்வோடு நின்ற 8 வழிச்சாலை திட்டம்
தமிழகத்தின் பிரதான சாலையான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது தாம்பரம், சிங்கபெருமாள் கோயில் வரை 8 வழிச்சாலை உள்ளது. அதிலிருந்து நான்கு வழிச்சாலை தொடங்கும் நிலையில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தால் தற்போது இந்த சாலையிலும் தினசரி நெரிசல் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்களை குறைக்க 8 வழி பசுமைச்சாலையாக மாற்ற ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு கடந்த 2024ம் ஆண்டு துவக்கத்தில் இதற்கான சாத்திய கூறுகள், பணிகளை ஆய்வு செய்தது.
நில எடுப்பு, உயர்மட்ட மேம்பாலங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தனர். விரைவில் ஒன்றிய அரசு இதற்கான ஒப்புதல் அளித்து பணிகள் தொடங்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வராமல் இருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சென்னை-திருச்சி இடையே 310 கி.மீ தூரத்துக்கு ரூ.26,500 கோடியில் இந்த 8 வழி பசுமைச்சாலையை அமைக்கலாம் என்றும், இதன் மூலம் பயண நேரம் 6 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறையும் என்றும் ேதசிய நெடுஞ்சாலை அணையம் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் ஏதும் இதுவரை நடைபெறவில்லை.
* அரசூர் பால பணிகள் மந்தமாக நடப்பதால் நேற்று விழுப்புரம் அடுத்த இருவேல்பட்டு அருகே கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
* மேம்பால பணியால் விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.