பகலில் வெயில், இரவில் மழை; காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு 20% அதிகரிப்பு: காய்ச்சல், சளி, தொண்டை வலியால் மக்கள் அவதி
சென்னை: வெயில் காலத்தில் இருந்து மழைக்காலம் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில், காலநிலை மாற்றங்கள் மனித உடல்நலத்தை பாதிக்கும் வகையில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, காய்ச்சல், சளி மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் பரவலாக அதிகரித்து வருகின்றன. வெயில் காலத்தில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் உலர்ந்த காற்று, மழைக்காலத்தில் திடீரென ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியாக மாறுவதால் உடல் இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறது. இந்த மாற்றங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு வழிவகுக்கின்றன. மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதால், காற்றில் உள்ள நுண்ணுயிரிகள் எளிதில் பரவுகின்றன. இதனால், காய்ச்சல், சளி, தொண்டைப் புண், மூக்கடைப்பு மற்றும் சுவாசப் பிரச்னைகள் அதிகரிக்கின்றன.
மேலும், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவ வாய்ப்புள்ளது. இந்த பருவநிலை மாற்றம், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது.இந்த காய்ச்சலால் நடுத்தர வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த காய்ச்சல்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெறாவிட்டால் டெங்கு, நிமோனியா போன்ற இணை காய்ச்சல்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. புறநோயாளிகள் பிரிவில் கிட்டத்தட்ட 10 முதல் 20 சதவீத அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை மருத்துவர் சவுமியா ஸ்ரீதரன் கூறியதாவது: தற்போது வானிலை தொடர்ந்து மாற்றத்துடன் காணப்படுகிறது. காலை பணி, இரவு மழை என சீரான வானிலை இல்லாத காரணத்தினால் இருமல், சளியுடன் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் மற்றும் உடல்வலி அதிகமாக இருக்கும் நபர்கள் தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். சில பேருக்கு தொண்டை கரகரப்பு, சளியுடன் வருகிறார்கள். தொடர் காய்ச்சல் ‘இன்புளூயன்சா’ பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி எலும்பு மூட்டு பிரச்னையாலும் சிலர் வருகிறார்கள்.
சிலருக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு காய்ச்சல் வருகிறது, அதற்கு பிறகு தானாக சரியாகி விடுகிறது. ஆனால் சரியாகவில்லை என்றால் அது அதிகரித்து ‘இன்புளூயன்சா’ பாதிப்புடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதுக்கு அடுத்தபடியாக சிலர் டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புறநோயாளிகள் வழக்கத்தை விட சற்று அதிகமாக தான் வருகிறார்கள். ஆனால் பயப்படும் அளவிற்கு இல்லை. இது பருவமழைக்கு முன்னால் வரும் வழக்கமான பிரச்னைகள் தான்.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 10 முதல் 20 சதவீத நோயாளிகள் தான் அதிகரித்துள்ளனர். ஆரோக்கியமாக இருப்பவர்கள் காய்ச்சல் ஏற்பட்டு பிறகு மாத்திரை எடுத்துக்கொண்டு 2 நாட்கள் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும்.
அதுவே இணை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மழை விட்டுவிட்டு பெய்தால் நன்னீரில் வளரக்கூடிய ‘ஏடிஸ்’ கொசுக்கள் அதிகளவில் இனப்பெருக்கம் வாய்ப்புள்ளது. இதுபோன்ற ‘ஏடிஸ்’ கொசுக்களால் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது உயிரிழப்பும் அதிகரிக்கக்கூடும். எனவே திறந்தவெளி இடங்கள், வீடு சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு அடைந்தால் உடல் தண்ணீர் இல்லாமல் ஆகிவிடும். எனவே நன்றாக சுட வைத்த தண்ணீர் குடிக்க வேண்டும். கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள், நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்து, முககவசம் அணிவதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
முகக்கவசம் அவசியம்;
பருவநிலை மாற்றம் காரணமாக, காய்ச்சல், சளி, தொண்டை வலி பாதிப்பால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களுக்கு செல்லும்போது முதியோர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்து உள்ள்ளது.
பொதுவான அறிகுறிகள்
* உடல் வெப்பநிலை உயர்வு (காய்ச்சல்), மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு,
* தொண்டை வலி அல்லது எரிச்சல் இருமல் (வறட்டு இருமல் அல்லது சளி இருமல்)
* உடல் சோர்வு மற்றும் தலைவலி, மூட்டு வலி மற்றும் தசைப்பிடிப்பு, சில சமயங்களில் வயிற்றுப்போக்கு அல்லது குமட்டல்
இந்த அறிகுறிகள் பொதுவாக சாதாரணமாக தோன்றினாலும், முறையான கவனிப்பு இல்லையெனில் நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி (ப்ரோன்கைடிஸ்) போன்ற சிக்கலான நோய்களுக்கு வழிவகுக்கலாம்.
மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை;
மழையில் நனைந்த ஆடைகளை உடனடியாக மாற்ற வேண்டும். ஈரமான ஆடைகள் உடல்நிலையைக் குறைத்து சளியை ஏற்படுத்தலாம். சூப், கஞ்சி, சூடான பானங்கள் குடிப்பது உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்க உதவும். கொசு கடி மூலம் பரவும் நோய்களை தவிர்க்க, கொசு வலை மற்றும் பூச்சி விரட்டி பயன்படுத்த வேண்டும்.
தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை;
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவும். தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அடிக்கடி கைகளைக் கழுவுதல், குறிப்பாக நெரிசல் மிகுந்த இடங்களில் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும். குடிநீரை நன்கு கொதிக்க வைத்து அல்லது வடிகட்டி பயன்படுத்த வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவி உண்ண வேண்டும். தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும், இது கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்கும். காய்ச்சல் அல்லது சளி அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். தினமும் லேசான உடற்பயிற்சி அல்லது யோகா செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.