காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சுய மருத்துவம் செய்ய வேண்டாம் : சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் காய்ச்சல் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் சுய மருத்துவம் செய்ய வேண்டாம், என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் மற்றும் மழை என காலநிலை சீராக இல்லாத காரணத்தினால் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக ஜூலை மாதத்திற்கு பிறகு காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் அதிகரிப்பது இயல்பு தான். தற்போது உள்ள வெப்ப நிலை வைரஸ் வாழ தகுதியாக இருக்கும். தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. எனவே மக்கள் அச்சப்பட தேவை இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பல வகை வைரஸ் நோய் உள்ளது. எச் 1 என் 1, இன்புளூயன்சா போன்ற வைரஸ் தான் இந்த காலத்தில் அதிகம் இருக்கும்.
புதிய வைரஸ் எதுவும் இல்லை. இந்த வைரஸ் தொற்றால் சளி, காய்ச்சல், உடல் வலி உள்ளிட்டவை ஏற்படும். இணை நோய் இல்லாதவர்கள் 3 முதல் 1 வாரத்தில் சரியாகி விடும். காய்ச்சல் உள்ளவர்கள் வீட்டிலேயே சுய மருத்துவம் செய்ய கூடாது, மருத்துவர்கள் அலோசனை படி மாத்திரை எடுத்துகொள்ள வேண்டும். பெரியவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள் தான் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.