ஆயுத பூஜையை முன்னிட்டு நிலக்கோட்டை சந்தையில் பூக்கள் விலை டபுளானது
நிலக்கோட்டை: ஆயுத பூஜை. விஜயதசமியை முன்னிட்டு நிலக்கோட்டை சந்தையில் பூக்கள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இயங்கி வரும் பூ மார்க்கெட் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்றதாகும். உள்ளூர் மட்டுமின்றி மதுரை, தேனி உள்ளிட்ட வெளிமாவட்ட வியாபாரிகளும், கேரளா போன்ற வெளிமாநில வியாபாரிகளும் இங்கு வந்து பூக்களை வாங்கி செல்வது வழக்கம். நவராத்திரி விழா நாட்களில் நிலக்கோட்டை சந்தையில் பூக்களின் விலை உயர்ந்தது. இந்நிலையில், நாளை மறுதினம் ஆயுத பூஜை என்பதால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.300 முதல் ரூ.400க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மல்லிகைப்பூ தரத்துக்கேற்ப ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது.
இதேபோல மற்ற பூக்களின் விலையும் இருமடங்கு உயர்ந்துள்ளது. விலை நிலவரம் (கிலோவில்) வருமாறு: முல்லை மற்றும் பிச்சிப்பூ ரூ.400 முதல் ரூ.500 வரை, சம்பங்கி ரூ.100 முதல் ரூ.150 வரை, கனகாம்பரம் ரூ.500, வைலட் செவ்வந்தி ரூ.150, செவ்வந்தி ரூ.130, வெள்ளை செவ்வந்தி ரூ.170, செண்டு மல்லி ரூ.100, வாடாமல்லி ரூ.90, கோழிக்கொண்டை ரூ.100, பன்னீர் ரோஜா ரூ.150, மருகு ரூ.160, மரிக்கொழுந்து ரூ.200, துளசி ரூ.70 என விற்பனையானது. ஆயுத பூஜை, விஜய தசமி நாட்களில் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.