பஞ்சாப்பில் வெள்ள சீற்றம்: பள்ளியில் சிக்கிய 400 மாணவர்கள், 40 ஊழியர்கள் மீட்பு
சண்டிகர்: பஞ்சாப்பில் ஏற்பட்ட வெள்ள சீற்றம் காரணமாக பள்ளியில் சிக்கி தவித்த 400 மாணவர்கள், 40 ஊழியர்கள் மீட்கப்பட்டனர். இமாச்சலப்பிரதேசம், சட்லெட், ரவி மற்றும் பியாஸ் நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பக்ரா, பாங் மற்றும் ரஞ்சித் சாகர் அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பஞ்சாப் மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் சிக்கியர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் சிக்கிய 400க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் மாநிலத்தின் சில பகுதிகளை சேர்ந்த மாணவர்களையும் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்.
மாதோபூர் ஹெட்வொர்க்கின் வெள்ளக்கதவு இடிந்து விழுந்ததில் சிக்கி தவித்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டனர். ரஞ்சித் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், பதன்கோட் பகுதியில் நிலைமை மோசமடைந்தது. இதனால் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அமிர்தசரஸ் மாவட்டத்தில், ரவி நதியின் வெள்ளப்பெருக்கு காரணமாக துஸ்ஸி கரை உடைந்ததால், அஜ்னாலா பகுதியில் உள்ள பல கிராமங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குருதாஸ்பூர் மாவட்டம் டபுரி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் சுமார் 400 மாணவர்களையும் 40 ஊழியர்களையும் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் டிராக்டர் மூலம் மீட்டனர்.
மாதோபூர் ஹெட்வொர்க்ஸ் அருகே வெள்ளத்தால் சூழப்பட்ட ஒரு கட்டிடத்தின் மேல் சிக்கியிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் உட்பட 25 பேரை ஹெலிகாப்டர் உதவியுடன் ராணுவ குழு மீட்டது. இதற்கிடையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை வெளியேற்றவும், நிவாரண பொருட்களை அனுப்பவும் மாநில ஹெலிகாப்டரை அனுப்புவதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். குருதாஸ்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பார்வையிட்டார். அப்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விரைவாக மீட்க மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.