வெள்ளத்தில் மிதக்கும் பஞ்சாப் இமாச்சல், உத்தரகாண்டில் நிலச்சரிவில் 6 பேர் பலி: 5 தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்
சிம்லா: இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் நிலச்சரிவின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உட்பட 6 பேர் பலியாகினர். இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. மழையில் சிம்லா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. ஜங்காவின் டப்ளூ பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
இதில் தந்தை மற்றும் அவரது 10 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் கோட்காய் பகுதியில் சோல் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் மண்ணில் புதைந்தார். இடிபாடுகளில் சிக்கிய அவரது உடலை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். சிர்மவுரின் சவ்ராஸ் பகுதியில் மற்றொரு வீடும் இடிந்து விழுந்தது. ரோஹ்ரு பகுதியில் உள்ள மோரி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் ஒரு பெண் மாயமானார்.
சிம்லாவின் பத்ஹால் கிராமத்தில் இடிபாடுகளில் சிக்கிய சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை. நிலச்சரிவு காரணமாக 6ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 793 சாலைகள் மூடப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கூறுகையில், நடு வழியில் சிக்கி தவித்த 15000 பக்தர்களில் 10ஆயிரம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன என்றார். உத்தரகாண்டில் கேதார்நாத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் மற்றும் மண்குவியல்கள் விழுந்ததில் சாலையில் சென்ற வாகனம் சிக்கியது. இதில் இரண்டு பேர் பலியானார்கள். இதேபோல் பஞ்சாப், அரியானா மற்றும் சண்டிகரில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.