நெமிலி அடுத்த பனப்பாக்கம் அரசு ஆண்கள் பள்ளி அருகே நெடுஞ்சாலையில் சூழ்ந்த வெள்ளம் : போக்குவரத்து பாதிப்பு
நெமிலி: நெமிலி அடுத்த பனப்பாக்கத்தில் தொடர் கனமழை காரணமாக அரசுப்பள்ளி அருகே நெடுஞ்சாலையில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் நெமியிலில் பெய்த பலத்த மழையால் நெமிலியில் இருந்து ஓச்சேரி செல்லும் சாலையில் பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனை நேற்று கலெக்டர் சந்திரகலா ஆய்வு செய்தர். பின்னர் அவரது உத்தரவின்பேரில் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் நெமிலி சுற்றுப்புற பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நெடுஞ்சாலையில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் இருசக்கர வாகனங்கள் சென்றால் மூழ்கும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த பேரூராட்சி நிர்வாகம் மழை வெள்ளத்தை அகற்றுவதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பள்ளி அருகே தண்ணீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கு வரமுடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இந்த இடத்தில் சாலை அமைக்கும்போது முறையாக அமைக்காததாலும், கால்வாய் வசதி இல்லாததால் தண்ணீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.