வேலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றுவரும் நிலையில் மாவட்ட ஆட்சியர், மேயர் நேரில் ஆய்வு
வேலூர்: வேலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றுவரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மேயர் நேரில் ஆய்வு செய்துவருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் மழை நீரானது கழிவு நீருடன் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கன்சால்பேட்டை, இந்திராநகர், வீர ஆஞ்சநேயர் தெரு உள்ளிட்ட 7 இடங்களில் தண்ணீர் வடியாத சூழலில் அங்குள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு நோய் பரவாமல் இருக்க சிறப்பு மருத்துவ முகாம்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறாமல் உள்ள மக்களை நிவாரண முகாம்களில் வந்து தங்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து அங்கு நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களில் 20 சுகாதார அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அந்த மக்களுக்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.