உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
திருப்பூர்: உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மையாக உள்ளது. மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் மலைமேல் பஞ்சலிங்கம் அருவி உள்ளது. இங்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக மலைப்பகுதியில், மழை பொழிவு தீவிரமடைந்த நிலையில்,
பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் கோவில் வளாகத்தை சூழ்ந்துள்ளதால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.