9 மணி நேரத்தில் 17 செ.மீ கொட்டியது வெள்ளக்காடானது மும்பை
மும்பை: மகாராஷ்டிராவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று தானே, மும்பை, ராய்காட், ரத்னகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கேற்ப நேற்று மும்பையில் மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து 3வது நாளாக மழை பெய்வதாலும், நேற்று அதிகாலையில் இருந்தே கனமழை வெளுத்து வாங்கியதாலும் நகரின் பல பகுதிகளிலும் வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. அந்தேரி சுரங்கப்பாதை, லோகண்ட்வாடா காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட சில இடங்கள் வாகனம் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியது. சுரங்கப்பாதை உள்பட இந்தப் பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மும்பை லோகண்ட்வாலா வளாகம் போன்ற சில தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை போக்குவரத்து ஒரு புறம் இருக்க, மும்பையில் பொதுப் போக்குவரத்தின் உயிர்நாடியாகத் திகழும் மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நேற்று சுமார் 9 மணி நேரத்தில் மும்பையின் பல பகுதிகளில் 17 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.