60 ஆண்டுகளுக்கு பிறகு ஆபாய அளவை தாண்டிய யமுனை ஆறு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!
டெல்லி: டெல்லியில் தொடர் பலத்த மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லி, அரியானாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவான 205.33 மீட்டரை தாண்டி 207.4 மீட்டராக அதிகரித்துள்ளது. இதனால் நதியின் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி ரிங் ரோடு, சிவில் லைன்ஸ், பேலா சாலை, சோனியா விஹார், யமுனா பஜார், அக்சர்தாம் கோயில் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் யமுனை கரையோரம் வசிக்கும் 12,000 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், யமுனை கரை மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 207.4 மீட்டராக உயர்ந்துள்ளது. இதற்கு முன் 1963ம் ஆண்டு யமுனை ஆற்றின் நீர்மட்டம் 207 அடிக்கு உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.