பறக்கும் நேரத்தில் இயந்திரக் கோளாறு மதுரை-துபாய் இடையே தனியார் விமானம் ரத்து
அவனியாபுரம்: மதுரை - துபாய் இடையே தனியார் பயணியர் விமானம் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம், துபாயில் இருந்து நேற்று காலை 9.50 மணிக்கு சுமார் 100 பயணிகளுடன் மதுரை வந்தது. இங்கிருந்து 130 பயணிகளுடன் 12.20 மணிக்கு பதிலாக, பகல் 1 மணிக்கு புறப்பட தயாரானது. பறப்பதற்காக ஓடுபாதையில் சென்றபோது, விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்பக்கோளாறு இருப்பதை, விமானிகள் கண்டுபிடித்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், விமானத்தை ஓடுபாதையில் இருந்து நிறுத்தி வைக்கும் இடத்திற்கு மீண்டும் கொண்டு வந்தனர்.
பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்ட நிலையில், இன்ஜினில் பழுது நீக்கும் பணிகள் தொடங்கின. ஆனால் மாலை 4 மணி வரை இன்ஜின் பிரச்னை சீராகவில்லை. இதையடுத்து துபாய் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பயணியர் செலுத்திய கட்டணத்தை திரும்ப தருவதாகவும், விருப்பம் உள்ளவர்கள் இன்று (ஆக. 29) துபாயில் இருந்து வரும் தங்கள் விமானத்தில் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இன்ஜின் கோளாறு சீரமைக்கப்பட்டதையடுத்து பயணியர் இன்றி மாலை 4.50 மணிக்கு விமானம் மும்பை புறப்பட்டுச் சென்றது.