விமானத்தில் கொண்டு செல்ல பக்தர்கள் இருமுடிக்கு அனுமதி மறுப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு பயணிகள் விமானத்தில் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: இந்துக்களுக்கான கட்சி என்று பாஜவினர் கூறி வருகின்றனர். நானும் இந்துதான். எனினும், இந்தாண்டு விமானங்களில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடி எடுத்து செல்வதற்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டதாக தகவல் வந்துள்ளது. அப்படியெனில், இந்துக்களின் மனம் புண்படும் வகையில் ஏன் இந்த நடவடிக்கையை மத்திய பாஜ அரசு எடுத்துள்ளது.
இதனால் வெளிநாடுகளை சேர்ந்த இந்துக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர். பக்தர்களின் நோக்கம், இருமுடி சுமந்து சென்று இறைவனை வழிபட வேண்டும் என்பது. அனைத்து கடவுள்களையும் எல்லோரும் வழிபட வேண்டும் என்பது காங்கிரசின் கொள்கை. கோட்பாடு. இந்த பிரச்னையில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, இந்தாண்டும் சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் பக்தர்கள் இருமுடி எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், இந்துக்களுக்கு விரோதமான கட்சி ஒன்றிய பாஜ அரசு என்பதை விரைவில் மக்கள் தெளிவுபடுத்துவார்கள். எஸ்.ஐ.ஆருக்கு எதிராக தமிழக வெற்றி கழகத்தின் போராட்டம் வரவேற்கத்தக்கது. ஜனநாயக சக்திகள் எல்லாம் சேர்ந்து, எஸ்.ஐ.ஆருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.